நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஆஸ்டின் மற்றும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து ஆஸ்டின் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கும், சாலை பணிகளுக்கும் மூலப்பொருட்களான பாறை பொடி, ஜல்லி போன்றவை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து விதிகளுக்குட்பட்டு கொண்டு வரப்படுகின்றன. தற்போது கடந்த ஒரு சில மாதங்களாகவே நெல்லை – குமரி மாவட்டத்துக்கு இடையே சோதனை சாவடி அமைத்துள்ளனர். அந்த வழியாக கட்டுமான பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால் 2 முதல் 4 நாட்கள் வரை லாரிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை உயர்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் தான் லாரிகளை சோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதிகபாரம் ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்யுங்கள் என்று தான் அப்போதைய அமைச்சர் கூறியிருப்பார். ஆனால் தற்போது நடைமுறையில் வரும்போது லாரிகள் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. அதில் எனக்கு உடன்பாடில்லை. கண்டிப்பாக அது தவறு. அதிகபாரம் ஏற்றி வந்து விபத்தை ஏற்படுத்தும் லாரிகளை அனுமதிக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை அல்ல. உரிய ஆவணங்கள் வைத்திருக்கும் லாரிகளை காலம் தாழ்த்தாமல் அனுமதிக்க வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறோம்” என்றார்.

பின்னர், அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” தமிழ்நாட்டில் ஒரே சட்டம்தான். கன்னியாகுமரிக்கு ஒருசட்டம், திருநெல்வேலிக்கு ஒரு சட்டம், தூத்துக்குடிக்கு ஒரு சட்டம், காஞ்சிபுரத்துக்கு ஒரு சட்டம் இல்லை. மக்கள் பாதிக்காதவகையில்தான் இருக்கவேண்டும். சும்மா தொழில் பண்ணுகிறவர்களின் தொழிலை கெடுப்பது, லாரி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை எல்லாம் செய்யக்கூடாது. இங்கு இருக்கும் அதிகாரிகள் அதை சரியாக நடைமுறைப்படுத்தணும் என்பதற்காகத்தான் நாகர்கோவில் எம்.எல்.ஏ ஆஸ்டினுடன் நானும் வந்து மனு அளித்துள்ளேன்.