`கை, கால்களை வெட்டினால்தான் சட்டத்தை மதிப்பார்கள்' – கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்

Spread the love

பெங்களூரை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மணிப்பாலில் கைதான மாணவர் அவருடன் சேர்ந்து படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது ஜாமீன் மனு கீழ்க்கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இம்மனு நீதிபதி நடராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது மனுதாரர் எந்த தவறும் செய்யாமல் 3 மாதங்களாக சிறையில் இருப்பதாக குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி நடராஜ், ”உப்பு தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். இன்னும் 4-5 நாட்கள் சிறையில் இருக்கட்டும். சிறைக்குப் பழகட்டும். யாருக்குத் தெரியும், நீங்கள்(மனுதாரர்) தண்டிக்கப்பட்டால், நீங்கள் மீண்டும் (சிறைக்கு) செல்ல வேண்டியிருக்கும்.

குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் உறுதியாகக் கையாளப்படாத காரணத்தால் மக்கள் சாதாரணமாக குற்றங்களைச் செய்கிறார்கள். அதனால்தான் மத்திய கிழக்கு நாடுகளை போலல்லாமல் ஒரு குற்றத்தைச் செய்வது மிகவும் எளிதாகிறது. குற்றவாளிகளை உறுதியாகக் கையாளாததால் சட்டம் அதன் பற்களை இழந்துவிட்டது. குற்றம் செய்பவர்களின் ஒரு காலையோ கையையோ வெட்டினால், மக்கள், ஒருவேளை, சட்டத்தை மதித்து நடப்பார்கள்.

ஜனநாயகம் இருப்பதால், எல்லோரும் அதன் பலனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்கிறார்கள்” என்று நீதிபதி தெரிவித்தார். அதோடு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் கொடுக்க மறுத்த நீதிபதி மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். நீதிபதியின் இக்கருத்து கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *