கொங்குவை குறிவைக்கும் தனுஷ்..? கோவையில் அரசியல் அஸ்திவாரம்? – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் நடிகர்களின் ரசிகர் மன்றம் என்றாலே, சும்மா ரசிகர்களைக் கூட்டி பேனர் கட்டுவதோடு வேலை முடிந்துவிடாது. ஒன்றியம், பேரூர், பகுதி, நகரம், மாவட்டம் என நிர்வாகிகளை நியமித்து, பின்னர் நற்பணி மன்றமாக களப்பணியில் இறங்குவது என… சில ரசிகர் மன்றங்களின் கட்டமைப்பு அரசியல் கட்சிகளையே நினைவுபடுத்தும்.

இப்போது அந்த ரூட்டில்தான் தனுஷ் ரசிகர் மன்றமும் வேகம் எடுத்து வருவதாகச் சொல்கிறார்கள்.

குறிப்பாக, கோவையை குறிவைத்திருக்கிறதா தனுஷ் டீம்? என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். கோவை தெற்கு, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ரசிகர் மன்றங்களை உருவாக்கி, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அதுவும் சும்மா மன்றம் தொடங்குவது இல்லையாம்… தொகுதிவாரியாக நிர்வாகிகளை அமைத்து, கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளும் நடக்கிறதாம். இதைப் பார்த்தால், “ரசிகர் மன்றமா… தேர்தல் நேரத்து பூத் கமிட்டியா?” என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு வேலைகள் பக்காவாகப் போய்க்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் பணிகளில் முக்கியப் பங்கு வகிப்பவர் தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் இயக்குநர் சுப்ரமணியம் சிவா. விஜய் ரசிகர் மன்றத்தின் அமைப்புப் பணிகளில் முக்கிய முகமாக இருந்த புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகளை நினைவுபடுத்தும் வகையில், சுப்ரமணியம் சிவாவின் செயல்பாடுகள் இருப்பதாகவும் மன்ற வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஏற்கெனவே கொங்கு மண்டலத்தில் தனது அமைப்பை வலுப்படுத்த விஜய் தரப்பும் கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருந்து வருகிறது. இந்த நிலையில், “ஒருவர் கொங்குவில் காய் நகர்த்த… இன்னொருவரும் அதே ரூட்டில் வருகிறாரா?” என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது.

இதற்கிடையே, தனுஷும் தனது அரசியல் அடித்தளத்துக்கான ஆரம்பப் பணிகளை கொங்கு மண்டலத்தில் இருந்தே தொடங்க முடிவு செய்திருப்பதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதை உறுதிப்படுத்தும் வகையில் தனுஷ் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

அதனால், தற்போதைய நடவடிக்கைகள் ரசிகர் மன்றத்தை அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவதற்கான பணிகளா… அல்லது அதற்கும் அப்பால் ஏதாவது திட்டம் இருக்கிறதா என்பது தெளிவாகவில்லை. ஆனால், கோவையில் ஐந்து தொகுதிகள்… உறுப்பினர் சேர்க்கை… தொகுதிவாரி கட்டமைப்பு… என கணக்கு போட்டு வேலை நடப்பதாகச் சொல்லப்படுவதுதான் இப்போது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தனுஷ் அரசியல் என்ட்ரிக்கு கொங்குதான் முதல் ஸ்டாப்பா? இல்லை… ரசிகர் மன்றத்துக்கே இது ‘மாஸ்டர் அப்கிரேடு’தானா? புஸ்ஸி ஆனந்துக்கு போட்டியாக சுப்ரமணியம் சிவா களமிறங்குகிறாரா என்பதை… அடுத்தடுத்த நகர்வுகள்தான் சொல்லும்.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *