
இளையராஜாவின் ‘மாதா உன் கோவிலில்..!
அழுதுகொண்டே பாடிய எஸ்.ஜானகி!
‘அச்சாணி’ படத்தின் அச்சாணி!
சில பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் அழுகைவந்துவிடும். ‘ஏகப்பட்ட தடவைதான் கேட்டுட்டோம். இப்படியொரு சம்பவமும் நம்ம வாழ்க்கைல நடக்கலை. ஆனாலும் ஏன் அழுகை வருது’ என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டாலும் பதில் கிடைப்பதில்லை. அதுதான் இசை நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் வேறொரு உலகம். பாடல் வரிகளில், கதை மாந்தர்களின் வலியை நம் வலியாக உணர்ந்து விகசிக்கும் மாற்றம்! ‘மாதா உன் கோயிலில் மணிதீபம் ஏற்றினேன்’ என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? கேட்டவர்கள் அழுதிருப்பீர்கள்.
இப்போதுதான் முதன்முதலாகக் கேட்கிறீர்கள் என்றால் அழுதுவிடுவார்கள். 78ம் ஆண்டு முத்துராமன், லட்சுமி நடிப்பில் ‘அச்சாணி’ என்ற படம் வெளியானது. காரைக்குடி நாராயணன் எனும் வசனகர்த்தா, தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் மாறியது இந்தப் படத்தில்தான்! பிறகு ஏகப்பட்ட படங்களை எடுத்தார், ஜெயித்தார் என்றாலும் கூட, ‘அச்சாணி’ படத்தை எடுப்பதற்குள் ஆயிரம் முறையேனும் அழுதிருப்பார்.
கதாசிரியராக, வசனகர்த்தாவாக பணியாற்றிக்கொண்டிருந்த காரைக்குடி நாராயணனை நண்பர் ஒருவர் உசுப்பிவிட்டார். ‘நாம சேர்ந்து படம் தயாரிக்கலாம்’ என்றார். மிகமிகக் குறைவான சம்பளத்தில் நடித்துக் கொடுக்க ஜெய்சங்கரும் சம்மதித்தார். லட்சுமியும் துணை நிற்பதாக உறுதி தந்தார். 76ம் ஆண்டு அறிமுகமாகி இரண்டாவது வருடத்திலேயே ஏகப்பட்ட படங்கள் குவிந்துகொண்டே இருந்தன இளையராஜாவுக்கு! ஆனாலும் ‘நேரம் ஒதுக்கித்தரேன்’ என்று வாக்குக் கொடுத்தார்.
ஆனால், ‘அச்சாணி’ படத்துக்கு அச்சாரம் போட்ட நண்பர் முதல்நாள் படப்பிடிப்பின்போதே நழுவிக்கொண்டார். படம் தள்ளிப்போனது. தானே தனியாளாக தயாரிப்பது என நாராயணன் முடிவு செய்தார். அடுத்த பிரச்னை பைனான்ஸியர்களிடம் இருந்து வந்தது… ‘ஜெய்சங்கருக்கு பதிலா முத்துராமனை போடுங்க’ என்றார்கள். ‘என்னடா இது வம்பாப் போச்சு’ என்று நொந்துபோனார் நாராயணன்.
ஒருவழியாக முத்துராமன், லட்சுமி என முடிவாகி படமும் எடுக்கத் தொடங்கினார். நடுநடுவே பணப்பிரச்னை. இளையராஜாவைப் பார்க்கவோ பேசவோ நேரம் கிடைக்கவில்லை. அப்படிப் பார்த்ததும், நிலைமையைப் புரிந்துகொண்ட இளையராஜா, உடனே ரிக்கார்டிங்கிறகு சம்மதித்தார். இரண்டே பாடல்கள். வாலி எழுதினார். எஸ்பிபியும் சுசீலாம்மாவும் ஒருபாடலைப் பாடினார்கள். இன்னொரு பாடலை எஸ்.ஜானகி பாடினார்.
பணத்தை எதிர்பார்க்காமல் இளையராஜாவே ரிக்கார்டிங் தியேட்டரை புக் செய்தார். அருணாச்சலம் ஸ்டூடியோவில் ஒதுக்கிக்கொடுத்த நேரத்துக்கு இளையராஜா வந்தார். ஆனால் எல்லோருக்கும் அதிர்ச்சி. வேறொரு இசையமைப்பாளரின் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அதையடுத்து பிரசாத் ஸ்டூடியோவிற்கு ஆளனுப்பி டைம் ஒதுக்கினார் இளையராஜா. அடுத்த அரைமணி நேரத்தில் இளையராஜா அங்கே சென்று வேலையைத் தொடங்கினார். ஆனால், தொழில்நுட்ப இயந்திரத்தின் கோளாறு.
‘’அந்த சமயத்துல என்னைவிட ரொம்பவே பதட்டப்பட்டதும் வருத்தப்பட்டதும் இளையராஜாதான். ஒருகட்டத்தில் அழுகையையெல்லாம் அடக்கிக்கொண்டு, ‘ராஜா சார், பரவாயில்ல. இன்னொரு நாள் பாத்துக்கலாம் சார்’ என்று நான் சொன்னேன். ஆனால் ‘கொஞ்சம் பொறுங்க’ என்று சைகை காட்டி ஆசுவாசப்படுத்தினார். அதன் பிறகு ஜானகியம்மா வந்து பாடினார். பாட்டு படத்தை எங்கேயோ தூக்கிக்கொண்டு போய் நிறுத்தியது. இளையராஜா எனக்கு வாழ்க்கையே கொடுத்தார்’’ என்கிறார் காரைக்குடி நாராயணன்.
அந்தப் படம் 78ம் ஆண்டு வெளியானது. லட்சுமியின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. நல்ல கதை என பத்திரிகைகள் கொண்டாடின. போட்ட முதல் கடந்து லாபம் வந்தது. பின்னர் காரைக்குடி நாராயணன் பல படங்களை தயாரித்து இயக்கினார். ஆனால் அந்தக் காலத்து ரசிகர்கள் கூட ‘அச்சாணி’ படத்தை மறந்துபோனார்கள்.
ஆனால் ‘மாதா உன் கோவிலில்’ பாடலை மறக்கவே இல்லை.
ஜானகிக்கு பாடலைச் சொல்லிக்கொடுத்தார் இளையராஜா.
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா – மாதா என்று ஜானகியின் குரல் நம் கண்களைக் கடந்து கண்ணீரை ஆறெனக் கடத்தித்தள்ளும்!
ஆரம்பத்தில் “மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்” என்று வரும்போது, வெறும் ஆர்கனின் ஓரிரு நோட்ஸ்கள் பின்னணியில் இசையாகச் சேரும். அதே வரிகள் அடுத்து வரும்போது தபேலா சேர்ந்து கொள்ளும். பாடலை எந்தவிதத்திலும் பாதிக்காது தத்தித் தொடரும் ஜாலம் ராஜாவின் மாஸ்டர் பீஸ்! பல்லவி முடிந்து முதலாவது BGM-ல் ஷைலபோனின் உதவியில் மணியோசை போல் வைத்திருப்பார் இளையராஜா.
‘ஹய்யோ’ என உருகிக் கரைவோம். பாடலில் வரும் வயலின் கூட்டு சேர்ந்து குழையும். கூடவே வீணையும் ஹஸ்கியாக சேர்ந்துகொள்ளும். தடக்கென எல்லாம் விலகி, தனியே ஒரேயொரு வயலின் மட்டும் உச்சஸ்தாயியிக்குச் செல்லும். இப்படியெல்லாம் பாடலை கட்டமைத்தால் நாம் என்னாவோம்?
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ – மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் எனும் போது, லட்சுமியின் நடிப்பும் ஜானகியம்மாவின் குரலும் நம் மனதைப் பிசையும். வாலியின் வரிகள் பெண்களைத் தாய்மைக்கொண்டு வந்து நிறுத்தும். ஆண்களை பெண்மைக்குள் புகுத்தி ரசவாதம் செய்யும்.
பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது – மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்’
இந்தப் பாடலைப் பாடும்போது இளையராஜாவின் ஆர்கெஸ்டேஷனைக் கட்டமைக்கும் கோவர்த்தனம் சார், இசையில் மயங்கி ‘கண்டக்ட்’ செய்யாமல் தடுமாறிப்போனார். ஜானகியம்மா பாடலைப் பாதியில் நிறுத்திவிட,பதறிப்போன இளையராஜா கண்ணாடி அறைக்குள் வந்தார். ஜானகியால் அழுகையை அடக்கமுடியவில்லை. ‘இந்தப் பாட்டு வரிகளும் மியூஸிக்கும் என்னவோ செய்யுது ராஜா. மன்னிக்கணும்’ என்று நேரம் எடுத்துக்கொண்டு பாடினார்.
“பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது”
என்ற வரிகளுக்குள் மொத்தக் கதையையும் அடக்கியிருப்பார் வாலி.
ராஜாவுக்கு மூச்சுபேச்சு எல்லாமே இசைதான். அந்த மூச்சுதான், உயிர்தான், ஜீவன் தான்… அவருடைய ஒவ்வொரு பாடலையும் உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கிறது. ‘மாதா உன் கோவிலில்’ பாடலைக் கேட்டால், பெண்ணாவோம்; தாயாவோம்; குழந்தையாவோம்!
– வி.ராம்ஜி