கோவை காந்திபுரம் பகுதியில் கோவை தெற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க 2.0 ஆட்சி அமைந்த உடன் ஒரு லட்சம் கோடி ரூபாயில் கோவை மாவட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். தொழில்துறை விரிவாக்கத்திற்காக ரூ. 50 ஆயிரம் கோடியிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 50 ஆயிரம் கோடியிலும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் கோவையில் 15 சதவிகிதமாக உள்நாட்டு உற்பத்தியை பெருக்கத் திட்டமிடப்படும்.
ஜவுளித்துறையில் புதிய முதலீடுகள், சிறு, குறு தொழில்துறையை மேம்படுத்த மூலப்பொருட்கள் தயாரிப்பு திட்டம், தகவல் தொழில்நுட்ப தலைநகராக மாற்ற முயற்சி, ஆழியாறு – நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்த கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும், ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையம் அமைத்தல், கிழக்கு புறவழிசாலைப்பணிகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட 26 திட்டங்கள் செயல்படுத்தப்படும்.