கோவை: பள்ளி மாணவன் அகிலன் தற்கொலை வழக்கு – சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட விசாரணை!

Spread the love

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவன் கடந்த 21ம் தேதியன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். “நீ எஸ்.சி.யா, பீஃப் சாப்பிடுவீயா?” என வகுப்பறையில் கேட்டு ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் இழிவுபடுத்தியதால் அகிலன் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக சக மாணவர்கள் இருவர், வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண் குமார் ஆகிய நான்கு பேர் மீதும் 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாதிய வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் அருண்குமாரை கைது செய்யும் வரை, அகிலனின் உடலை வாங்க மாட்டோம் என அவனது பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கே.கே. நாயுடு பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அகிலனிடம் சாதிய பாகுபாடு காட்டி துன்புறுத்திய இரண்டு சக மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் காவல் துறையினர் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற வேண்டுமென அகிலனின் பெற்றோர் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து அகிலன் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். விரைவில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் வழக்கு விசாரணையை துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களை கைது செய்யும் வரை அகிலனின் உடலை பெறமாட்டோம் என மாணவரின் பெற்றோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *