‘கோவை மாஸ்டர் பிளான் 2041’ விஞ்ஞான ஊழலுக்கு வழிவகுக்கும்: இபிஎஸ் குற்றச்சாட்டு | EPS urges government to review Coimbatore Master Plan

1374442
Spread the love

சென்னை: “கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல், நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்து புதிய கோயமுத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட வேண்டும்” என அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல் நிலப் பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நகர ஊரமைப்பு மற்றும் உள்ளூர் திட்டக் குழுமம் தயாரித்துள்ள கோவை மாவட்ட மாஸ்டர் பிளான் 2041-ல் பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் கோவை மாநகராட்சியுடன் 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய சுமார் 1531 சதுர கிலோ மீட்டருக்கு புதிய கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாஸ்டர் பிளான் தயாரிப்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் முழுமையாக நடத்தப்படாமல், கூட்டத்தில் கருத்து வேறுபாடுகளும், சலசலப்புமும் ஏற்பட்டதால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் பல்வேறு குளறுபடிகளைக் கொண்ட மாஸ்டர் பிளான் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, குடியிருப்பு நில வகைப்பாட்டில் உள்ள நிலத்தினை விவசாயம் மற்றும் தொழில் பிரிவுக்கு மாற்றியுள்ளனர். ஏற்கெனவே வளர்ந்த தொழில் நகரமான கோவையின் நகரப் பகுதியில் நில மதிப்பீட்டுத் தொகை மிகவும் அதிகரித்துள்ள நிலையில், நில மாற்றம் செய்ய அனுமதி வழங்குவதன் மூலம் ஊழலுக்கு வழிவகை செய்வதுடன், பல்வேறு மோசடிகள் நடைபெறவும் வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

நில வகைப்பாடு மாற்றத்தில் ஆளும் திமுக குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் நிறுவனம் மற்றும் திமுக குடும்ப உறவுகளுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் நிலங்கள் என சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், குடியிருப்பு மனை நில வகைப்பாட்டிலேயே இருக்கும் வகையில், கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ, விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வித்திடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 4 ஆண்டு காலத்தில் விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்திடாத இந்த திமுக அரசு, பொதுமக்கள் கருத்துக்கேட்பு இன்றி, திட்டமிடப்படாத கிராமப் பகுதிகளையும் இணைத்து கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041 தயாரித்து குறிப்பிட்ட தரப்பினர் லாபம் ஈட்டும் வகையில் ஊழலுக்கு வழி ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அரசு ஏதோ சிறப்பாக செயல்படுவதுபோல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்த, இந்த மாஸ்டர் பிளான் மூலம் விடியா திமுக அரசு முனைகிறது என கோவை மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ன்படி, நில வகைப்பாடு மாற்றங்களால் சுமார் 50,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே, தற்போது வெளியிட்டுள்ள கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ன்படி, நகர ஊரமைப்புத் திட்டத்தில் இணைத்துள்ள பகுதிகளில் நிலவகைப்பாடு மாற்றங்களை மறு ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டங்களை முறையாக நடத்தி, அதன்படி திருத்தங்கள் செய்து புதிய கோயமுத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட இந்த திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *