`சட்டமன்றத்தில் அதிமுகவை விழுங்க நினைக்கும் தவெக?’ – எடுபடுமா விஜய்யின் மாஸ்டர் ப்ளான்? | Will Vijay’s TVK Swallow AIADMK’s Vote Bank?

Spread the love

தேர்தலுக்கு முன்பாக பொதுக்கூட்ட மேடைகளிலும் பிரசாரங்களிலும் அதிமுகவை விமர்சிக்காமல், அதிமுகவின் அடையாளமாக திகழும் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர் விஜய் உட்பட தவெக-வின் முக்கியஸ்தர்கள். திமுக எதிர்ப்பை கூர்மைப்படுத்தவும் பிளவுகளால் பலவீனமாக இருக்கும் அதிமுக அனுதாபிகளின் வாக்கை இழுக்கவும் தவெக இப்படியொரு யுக்தியை கையாண்டு வந்தது.

அது தேர்தலில் தவெக-வுக்கு கைகொடுக்கவும் செய்தது. கட்சிப் பொதுக்கூட்டங்களில் கையாண்ட அதே யுக்தியை இப்போது சட்டமன்றத்திலும் தவெக கையாள தொடங்கியிருக்கிறது. அதிமுகவை அப்படியே விழுங்க நினைக்கும் தவெகவின் திட்டம் கோட்டை வரை நீள தொடங்கியிருக்கிறது.

முதல்வர் விஜய்யின் இந்த மாஸ்டர் ப்ளான் தவெகவுக்கு கைகொடுக்குமா?

பட்ஜெட் கூட்டத்தொடர் ஐந்து நாட்களாக நடந்து வருகிறது. இதில் தவெகவின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியினருக்கு பதில் சொல்லும் விதம் இரண்டு விதமாக இருப்பதை பார்க்க முடிகிறது. திமுக எம்.எல்.ஏக்கள் எதாவது விமர்சனங்களை முன்வைத்தால் உடனே குறுக்கிட்டு அதற்கான பதிலை கொடுப்பதோடு காட்டமான விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.

அதேநேரத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசும் போது தவெக அமைச்சர்கள் அடிக்கடி குறுக்கிடுவதில்லை. அப்படியே குறுக்கிட்டாலும் என்ன விஷயமோ அதற்கான பதிலை தரவுகளோடு கொடுத்துவிட்டு அமர்ந்து விடுகிறார்கள். (11.08.26 அன்று எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதவ் அர்ஜூனாவுக்கும் நடந்த வாதம் மட்டுமே விதிவிலக்கு.)

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

காவிரி விவகார தீர்மானத்தில் முதல்வரின் பதிலுரையின் போதுமே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை சீண்டும் வகையில் மட்டுமே முதல்வரின் பேச்சு இருந்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனங்களை முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை.

“அவையில் எல்லாருடைய கருத்துக்கும் சேர்த்து பதில் சொன்னால்தானே சரியாக இருக்கும்’ என பழனிசாமியே பேசினார். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதில் சொல்லவே இல்லை. இது தேர்தலுக்கு தவெக பயன்படுத்திய யுக்தி. திமுகவை மட்டுமே தங்களின் பிரதான எதிரியாக நிலைநிறுத்திக் கொண்டு, வேறெந்த கட்சியையும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அதே யுக்தியின் நீட்சியாகத்தான் அவையில் முதல்வரின் செயல்பாடும் இருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *