சதுரங்க வேட்டை: ஏய்ப்பெனும் கலை!| ஆதி தாமிரா | `சினி’ஸ்கோப் 31

Spread the love

இப்படித்தான், ’வெளிநாட்டிலிருந்து டாலரில் பணம் வந்திருக்கிறது, மதிப்பு மிக்க பொருட்கள் வந்திருக்கின்றன… ஆனால், கஸ்டம்ஸ் கட்டணம் கட்டினால்தான் அதை வெளியே எடுக்க முடியும்’ என்று ஏமாற்றுவேலைகள் நடப்பதை செய்தித்தாள்களில் படிக்கிறோம்.

ஏமாளிகள் முதலில் எதற்கோ ஆசைப்பட்டு ஒரு தொகையைக் கட்டிவிடுகிறார்கள். அதன் பின்னர் மேலும் மேலும் காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலில் கட்டப்பட்ட பணம் வீணாகிவிடக்கூடாது எனும் எண்ணத்திலேயே மேலும் மேலும் பணத்தைக் கொடுத்து பெருந்தொகையை இழக்கிறார்கள். அது ஒரு நுட்பம்.

இந்த சதுரங்க வேட்டை, இப்படியான நுட்பங்களின் தொகுப்பாக இருந்தது. சீட்டிங் உலகம் எப்படி இயங்குகிறது என்பதை பார்வையாளர்களுக்கு பரபரப்பான காட்சியமைப்புகளோடு கூடிய ஒரு பாடமாகவே நடத்தியது என்றும் சொல்லலாம். இந்தப் படத்தைப் பார்க்கும் போது, சமூகத்துக்கு அவசியமான ஒரு விழிப்புணர்வுக் கதை, அதுவும் இத்தனைப் பரபரப்பாக, இத்தனை நெகிழ்ச்சியாக சொல்லப்பட வாய்ப்பிருக்கிற ஒரு கதை, எப்படி இத்தனை நாட்களாகக் கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது என்ற வியப்புதான் ஏற்படுகிறது.

காந்தி பாபுவின் சின்ன வயதில், வறுமை அவனைக் கடுமையாகப் பாதித்து அவனது வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. அந்த வறுமையிலிருந்து மீள நாள் முழுதும் உழைக்கிறான்.

ஆனால், அது செல்வத்தைக் கொண்டுவரவில்லை. ஒருநாள் சில சூதாடிகளிடமிருந்து பணம் சம்பாதிக்க ஒரு வழியைக் கண்டுகொள்கிறான். அதில் தேர்ச்சியுறுகிறான். அது சீட்டிங்! செட்டியாரைப் போன்ற பணக்காரத் தனிநபர்களை ஏய்த்துச் சம்பாதிப்பது, கக்கூஸில் பிடித்த தண்ணீரை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த ’மேஜிக் பேர்ள்’ என்று சொல்லி, எம்.எல்.எம் எனும் பெயரில் எளிய மக்களை ஏய்ப்பது என எத்தனையோ வழிகளில் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கிறான்.

அவனது வாழ்க்கையிலும் ஒரு பெண் வந்து சேர்கிறாள். பானு எனும் அந்தப் பெண், ’யாரோ செஞ்ச தப்புக்காக வேற யாரையோ ஏமாத்துறது தப்பில்லையா சார், ஒருத்தருக்கொருத்தர் அக்கறையாவும், அன்பாவும் இருக்குறதுதானே சார் வாழ்க்கை?’ என்று அவனைக் கேட்கிறாள். ’இந்த சமூகம் நமக்கு என்ன பண்ணுச்சோ, அதைத்தான் நாம இந்த சமூகத்துக்கு பண்ணுறோம், ரொம்ப சிந்திக்காத பானு’ என்று சொல்லி அவளை எளிதாகக் கடந்து போய்விடுகிறான் காந்தி பாபு.

ஆனால், எல்லாக் கதைகளுக்குமே ஒரு முடிவு உண்டு என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. ஒரு நாள் போலீஸில் மாட்டிக்கொள்கிறான். சம்பாதித்த பணத்தைக் கொண்டு சட்டத்திலிருந்து அவனால் தப்பித்து வந்துவிட முடிகிறது. ஆனால், அவனால் ஏமாற்றப்பட்ட, கோடிகளில் பணத்தை இழந்த, வாழ்க்கையே தடம்புரண்டு போன ஒருவன், கூலிப்படையினர் மூலமாக அவனைப் பிடித்துக் கொல்ல முனைகிறான். அந்த முயற்சி காந்தி பாபுவின் வாழ்க்கையை மற்றுமொரு முறை புரட்டிப்போடுகிறது. அவர்களிடமிருந்து காந்தி பாபு தப்பினானா? மீண்டும் பானுவைச் சந்திக்கும் அவனது வாழ்க்கையில் எப்படியான மாற்றம் நிகழ்ந்தது என்பது கதையின் முடிவு!

காந்தி பாபுவாக நட்டி நடித்திருந்தார். நட்டி எனும் நடராஜ் அடிப்படையில் ஓர் ஒளிப்பதிவாளர். 2002-ல் விஜய் நடித்த யூத் படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக தமிழில் அறிமுகமான நட்டி, இந்தி சினிமாவுக்குப் போய், அங்கு ஓர் ஒளிப்பதிவாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். பிளாக் ஃப்ரைடே, ஜப் வி மெட், ராஞ்சனா போன்ற படங்கள் அவரது ஒளிப்பதிவுப் பயணத்தில் குறிப்பிடத்தகுந்தவை. ஒரு நடிகராக 2006-ல் வெளியான ’நாளை’ படத்தில் அறிமுகமானாலும், பின்னர் வேறு பல படங்களில் நடித்திருந்தாலும், சதுரங்க வேட்டைதான் அவரது நடிப்பில் குறிப்பிடத்தகுந்த, தனித்துவமான படமாக நிலைபெற்றிருக்கிறது.

காந்தி பாபு பாத்திரத்துக்கென்றே அளவெடுத்து உருவாக்கியவர் போலிருந்தார் நட்டி. காந்தி பாபுவின் ஏமாற்று வேலைகளைத் தெரிந்துகொண்ட பிறகும், அவனுக்குள் இருக்கும் ஒரு சின்ன வலியைப் புரிந்துகொண்டு அவனை நேசிப்பதோடு, அவனை நல்வழிக்குத் திசை திருப்பும் முக்கியமான பானு எனும் பாத்திரத்தில் இஷாரா நாயர் நடித்திருந்தார். அன்பும், அப்பாவித்தனமும் கொண்ட அந்தப் பாத்திரத்துக்கு அவரது தோற்றமும், பெரிய கண்களும், குரலும் கச்சிதமாகப் பொருந்திப் போயிருந்தன. சுத்தத் தமிழ் பேசும் வித்தியாசமான கூலிப்படைத் தலைவன் கதாபாத்திரத்தில் வி.பி.வளவன் நடித்திருந்தார். மேலும், பொன்வண்ணன், இளவரசு, கவிஞர் பிறைசூடன், தரணி வாசுதேவன் ஆகியோர் நடித்திருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *