எனவே, ரத்தக் குழாய் பாதிப்பு, கிருமித் தொற்று இருப்பது, நரம்பு பாதிப்பு இருப்பது இவை எல்லாம் சேர்ந்து புண்ணை அதிகப்படுத்தும். புண் அதிகமாகும்போது உடம்பில் பாக்டீரியாவின் அளவு அதிகரித்து ரத்தத்தில் கலந்துவிட்டால் உடம்பு முழுவதற்கும் ரத்தத்தின் வழியாகப் பரவிவிடும்.
இந்த மாதிரியான சூழ்நிலையில், காலைக் காப்பாற்ற முடியாத நிலைக்குச் சென்றுவிட்டாலோ, விரல்களைக் காப்பாற்ற முடியாத அளவிற்குத் தொற்று தீவிரமாகிவிட்டாலோ, சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இல்லையென்றாலோ, தொற்றும் வேகமாகப் பரவுகிறது எனும்போது உயிரைக் காப்பாற்ற, அந்தத் தொற்றை உடலை விட்டு வெளியேற்றினால்தான் நல்லது எனும் சூழலில் விரலை எடுக்க வேண்டிய நிலைமை உருவாகும்.
சர்க்கரை நோயாளிகள் இதைத் தடுக்க முடியும். சர்க்கரை அளவை ஒழுங்காகக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதன் மூலமாக கால் நரம்பு பாதிக்கப்படாமல் தடுக்க முடியும். கால்களில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படாமலும் தடுக்க முடியும்.

இதை ஆரம்பகட்டத்திலிருந்தே கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். புண் வந்த பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்திப் பலன் இல்லை. ஏற்கெனவே நரம்பு மற்றும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டுவிட்டன என்றால், அதற்குப் பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது.
நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் அடிபட்டாலும் புண் ஆறிவிடும். அதனால்தான் பல நோயாளிகள் “சர்க்கரை இருந்தாலும் என் கால் புண் ஆறிவிடுகிறது’ எனக் கூறுகிறார்கள். அதற்கு ரத்தக் குழாய் பாதிக்கப்படவில்லை, நரம்பு ஒழுங்காக வேலை செய்கிறது என்று அர்த்தம்.
ரத்தக் குழாய் பாதித்தால்தான் நரம்பு தளர்வடையும். நரம்பு தளர்வடைந்து, தொற்றும் தீவிரமானால் விரலை எடுக்கும் நிலைமை ஏற்படும். அதனால் எப்போதும் சர்க்கரை நோயாளிகள் தினமும் முகத்தைக் கழுவி கண்ணாடியில் பார்ப்பது போல, காலைக் கழுவி, துடைத்து, காலில் ஏதாவது அடிபட்டு இருக்கிறதா, வீக்கம் வந்துள்ளதா, நிறம் மாறியிருக்கிறதா, சிவந்துள்ளதா அல்லது கருத்துப்போயுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
எதையுமே ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்துத் தொற்று பரவுவதற்கு முன்பே சரியான மருத்துவம் எடுத்துக்கொண்டால், கால் விரலை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.
டாக்டர் சண்முகம்:
சென்னை அசோக்நகரில் செந்தூர் டயாபட்டீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் என்ற பெயரில் கிளினிக் வைத்திருக்கிறார். நீரிழிவு மருத்துவத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.