இது பெங்களூரு பாஸ்… இங்கே ஆள விடுறதை விட வீடு போனா வலி அதிகம்! – வாடகை வீட்டின் மறுபக்கத்தை பகிர்ந்த பெண்ணின் குமுறல்!
இந்தியாவின் சிலிக்கான் வேலி, கனவுகளின் தலைநகரம் என பல பெயர்களில் அழைக்கப்படும் பெங்களூரு, பல இளைஞர்களின் தொழில் வாழ்க்கைக்கு அடித்தளமிடுகிறது. ஆனால், இங்கு ஒரு நல்ல வேலையைத் தேடுவதை விட, நிம்மதியாகத் தங்குவதற்கு ஒரு வாடகை வீட்டைக் கண்டுபிடிப்பதுதான் மாபெரும் யுத்தமாக இருக்கிறது என்பதை சமீபத்திய சம்பவம் ஒன்று அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
பெங்களூருவில் வசிக்கும் பெண் ஒருவர், தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். அந்த பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ, இப்போது இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து, பெங்களூரு வாடகை சந்தையின் கோர முகத்தை மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளது. “ஒரு உறவை முறித்துக் கொள்வதை விட, கஷ்டப்பட்டுப் பார்த்த ஒரு வீடு கைநழுவிப் போவதுதான் அதிக வலியைத் தருகிறது” என்று அந்தப் பெண் தனது வீடியோவில் குமுறியிருப்பது, பலரையும் கலங்க வைத்துள்ளது.
அந்த வீடியோவில் அவர் தனது கதையை விவரிக்கிறார். சமீபத்தில் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்த அவர், கடந்த ஒரு மாதமாக முழு வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையறை கொண்ட (ஃபர்னிஷ்டு 1BHK) வீட்டைத் தேடி அலைந்துள்ளார். பல தேடல்களுக்குப் பிறகு, ஒரு வீடு அவருக்குப் பிடித்துப் போயிருக்கிறது. பல விஷயங்களில் சமரசம் செய்து கொண்டாலும், வாடகை மட்டும் குறையவில்லை. இருந்தும், வீட்டு உரிமையாளர் விதித்த அத்தனை நிபந்தனைகளுக்கும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன்பு, ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கேட்டுள்ளார். சரியாக ஒரு மணி நேரம் கழித்து, ‘டெபாசிட்’ தொகையைச் செலுத்தத் தயாராக இருப்பதாக உரிமையாளரை அழைத்தபோது, அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீடு வேறு ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டுவிட்டது என்ற செய்தி அவரை நிலைகுலையச் செய்தது. “கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் நான் வீட்டைப் பார்த்தேன், அதற்குள் எப்படி?” என்று அவர் கேட்டதற்கு, “வேறு ஒருவர் அதற்குள் டெபாசிட் செலுத்தி வீட்டை எடுத்துக்கொண்டார்” என வீட்டு உரிமையாளர் சாதாரணமாகப் பதிலளித்துள்ளார்.