மறைந்த புகழ்பெற்ற தமிழ் இலக்கியவாதியும், பிரபல பட்டிமன்ற நடுவருமான ஐயா சாலமன் பாப்பையா மறைவையொட்டி, தி.மு.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக முன்னோடிகளுடன் நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா, “சாலமன் பாப்பையா அவர்களின் இழப்பு தாங்க முடியாத ஒன்று. கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டுதான் பேசுகிறோம். அவர் தனது சொந்த பிள்ளைகளை மட்டுமல்லாது, உலகமெங்கும் வாழும் தமிழ் பிள்ளைகளைத் தனது தமிழால் வளர்த்து எடுத்துள்ளார்.

எல்லோரின் இதயத்திலும் இடம் பிடித்த அவருக்கு, அவர் காட்டிய வழியில் நின்று தமிழைக் காப்பதும், கண்ணியத்தோடு பழகுவதுமே நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும். தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் இந்த இழப்பினால் மிகுந்த மனக்கலக்கம் அடைந்துள்ளார். தமிழ் அறிஞர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பது தி.மு.க-வின் தொடர் நிலைப்பாடாகும்.
எனவே, சாலமன் பாப்பையா அவர்களின் உடலை அரசு மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும்” என வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து தமிழ் அறிஞர்கள், இலக்கிய ஆளுமைகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். இந்த நிலையில், மறைந்த தமிழ் பேச்சாளர் சாலமன் பாப்பையா அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தன் எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.