சிம்ரன் : பார்வைக் குறைபாட்டை தாண்டி… `காதல்’ – 2 தங்கங்களுக்குப் பின்னால் ஒரு நெகிழ்ச்சிக் கதை! | Simran Wins 2 Gold Medals Despite Visual Impairment: An Inspiring Story

Spread the love

ஒரு விளையாட்டு வீரர் பதக்கம் வெல்லும்போது, மேடையில் அவருடைய பெயர் அறிவிக்கப்படும். தேசியக் கொடி உயர்த்தப்படும். ஆனால், அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தியாகங்களும் கண்ணீரும் பல நேரங்களில் வெளியில் தெரிவதில்லை. இந்தியாவின் பாரா தடகள வீராங்கனை சிம்ரன் ஷர்மாவின் கதையும் அப்படித்தான்.

பார்வைக் குறைபாடு, பொருளாதார நெருக்கடி, தாய்மைப் பொறுப்பு எனப் பல சவால்களைக் கடந்து, இன்று சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதித்திருக்கிறார்.

கேலிகளை தாண்டி… கனவுக்குத் துணையாக நின்ற கணவர்!

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தைச் சேர்ந்த சிம்ரன், குறைமாத பிரசவத்தில் பிறந்தவர். பிறந்ததிலிருந்தே பார்வைக் குறைபாடு இருந்ததால், சிறு வயதில் மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியிருக்கிறார். ஆனால், அந்தக் கேலிகள் அவருடைய ஓட்டத்துக்கு முட்டுக்கட்டையாக மாறவில்லை. தடகளத்தில் ஆர்வம் வளர்ந்தபோது, அவருடைய திறமையை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தியவர் கஜேந்திர சிங். விளையாட்டில் தொடங்கிய இந்தப் பயணம், பின்னாளில் இருவரையும் வாழ்க்கைத் துணைகளாகவும் மாற்றியது.

சிம்ரனின் கனவை நனவாக்குவதற்குக் கணவர் கஜேந்திர சிங் அளித்த ஆதரவு சாதாரணமானதல்ல. பயிற்சியளிப்பதுடன் நின்றுவிடாமல், அவருடைய விளையாட்டுப் பயணத்துக்கான செலவுகளையும் சமாளிக்க முயன்றார். சிம்ரனின் சர்வதேச விளையாட்டுப் பயணத்துக்காகச் சுமார் ரூ.3.5 லட்சம் கடன் வாங்கியதுடன், ரூ.9 லட்சம் மதிப்பிலான நிலத்தையும் விற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மற்றவர்கள் அவருடைய குறைபாட்டைப் பார்த்தபோது, கஜேந்திர சிங் அவருடைய திறமையைப் பார்த்தார். அந்த நம்பிக்கைக்குப் பலனாக, 2024-ல் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று உலக சாம்பியனானார் சிம்ரன்.

இரட்டைக் குழந்தைகள்… மீண்டும் தடகளப் பாதையில்!

வெற்றிப் பயணம் தொடர்ந்தாலும், வாழ்க்கை அவருக்கு இன்னொரு பொறுப்பைக் கொடுத்தது. இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயான பிறகு, மீண்டும் பழைய உடற்தகுதியைப் பெற்று ஓட்டப்பந்தயத்துக்குத் திரும்புவது எளிதாக இருக்கவில்லை. குழந்தைப் பிறப்புக்குப் பிறகு ஏற்பட்ட ஹார்மோன் தொடர்பான சிக்கல்களும் பயிற்சிக்குத் திரும்புவதில் சவாலாக இருந்தன. ஒருபுறம் குழந்தைகள்; மறுபுறம் நாட்டுக்காகச் சாதிக்க வேண்டும் என்ற கனவு. இந்த இரண்டுக்கும் இடையில் தன்னை மீண்டும் தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. அந்தக் கடினமான காலத்தில் கணவர் கஜேந்திர சிங்கும் பயிற்சிக் குழுவினரும் அவருக்கு ஊக்கமளித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *