“சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்களை மூடிவிட்டு தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார்? என திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் ஒழுங்குபடுத்த காவல்துறையை பயன்படுத்தாமல், பந்தோபஸ்துக்கும்-இனிப்பு வழங்குவதை தடுப்பதற்கும் பயன்படுத்தினால் கொலைகளும்-கொள்ளைகளும் பெருகாமல் என்ன செய்யும்? 2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிலேயே சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தமிழ்நாட்டில்தான் சிறப்பாகச் செயல்படும் துறையாக முதலிடம் பெற்றுத் திகழ்ந்தது.
சிறைச்சாலைகள் வெறும் தண்டனைக் கூடங்களாக மட்டுமின்றி, கைதிகள் திருந்தி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திடவும், அங்கு இருக்கக்கூடிய தண்டனை சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு பொருளாதாரத்தை ஈட்டுவதற்கும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில்தான் கைதிகளால் நடத்தப்படும் சில்லறை பெட்ரோல் வணிக விற்பனை நிலையங்களும் சிறைத்துறையால் செயல்படுத்தப்பட்டன. சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பதற்கு ‘பிரிசன் பஜார்’ என்கிற விற்பனை நிலையங்களும் சிறைத்துறை நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டன.