தில்லியின் அந்தப் பரபரப்பான தெருவின் ஊடே வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தாள் சிற்பிகா. தோளில் சாய்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தது ஒரு சிறு குழந்தை. அதற்குத் தேவையான சாமான்களை அவளுடைய முதுகில் சுமந்துகொண்டிருந்த பையில் வைத்திருந்தாள்.
காலை நேர பீக் அவர் டிராஃபிக் சில சமயங்களில் மூச்சு முட்ட வைக்கிறது. அதுவும் தில்லி போன்ற மெட்ரோ சிட்டிகளில் வாகனங்களால் கிளம்பும் சத்தமும், புகையும் காற்றில் கலந்து மனிதர்களைத் தொந்தரவு செய்து மகிழ்கின்றன. தில்லியில் தொடர்ந்து வசித்தால் நுரையீரல் பாதிக்கப்படுவது நிச்சயம் என்று எண்ணி, தில்லியின் பொல்யூஷனைத் திட்டிக் கொண்டேதான் நடந்தாள். குழந்தைக்காகவாவது தில்லியை விட்டு எங்காவது சென்றால் தேவலை என்று தோன்றியது. அதற்கு ஏற்றபடி வேலை கிடைக்க வேண்டுமே?
‘ரெண்டு வருஷத்துல என் வாழ்க்கை இப்படித் தலைகீழா மாறப் போகுதுன்னு தெரியுமா என்ன எனக்கு? இப்போ இந்தச் சின்னக் குழந்தையை வச்சே, இவளைச் சுத்தியே எல்லாம் யோசிக்க வேண்டியிருக்கே? நம்ம ஊர்ப் பக்கம் போறதைப் பத்தி நெனைச்சுக் கூடப் பாக்க முடியாது. இவளோட பாதுகாப்பை மனசுல வச்சுக்கிட்டு எல்லாத்தையும் முடிவு பண்ண வேண்டியிருக்கே!” என்று யோசித்தபடி நடந்து கொண்டிருந்தாள் சிற்பிகா. அவளுடைய சிந்தனையைக் குலைக்கும் விதமாகச் சத்தமெழுப்பி அவளை அழைத்தது அவளுடைய மொபைல்.
ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த மாதினியின் தூக்கத்தைக் கலைக்காமல், கஷ்டப்பட்டுத் தன்னுடைய மொபைலை எடுத்து ஆன் செய்தாள். “ஹாய் சிற்பிகா, கஹாம் ஹோ தும்? எங்கே இருக்கே? உடனே என்னோட கிளினிக் வரயா?” அழைத்தது அவளுடைய புரொஃபசரும், மென்டாருமான டாக்டர் அனுபவ் சின்ஹா.
விதிவசத்தால் அனைத்தையும் இழந்து துன்பக்கடலில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் சிற்பிகாவிற்கு எப்படியாவது உதவி செய்யத் துடிக்கும் ஒரு நல்லவர். ஆழ்கடலில் சிறிய துடுப்பாக அவருடைய உதவி மட்டும் கிடைக்கவில்லை என்றால், வாழவேண்டும் என்கிற ஆசையை எப்போதோ தொலைத்திருப்பாள் அவள். ஆங்கிலம், ஹிந்தி கலந்த பாஷையில் தொடர்ந்தது அவர்களுடைய உரையாடல். “என்ன விஷயம் அங்கிள்? பேபிம்மாவை கிரெஷ்ஷில் விடப் போயிட்டிருக்கேன். விட்டுட்டு வரட்டுமா?”
“இல்லை. உடனே வா. அங்கே போயிட்டு வந்தா லேட்டாயிடும். உடனே கிளம்பி அரை மணி நேரத்துக்குள்ள வந்துரு. பஸ்ஸுக்கு வெயிட் பண்ணாம ஓலா, ஊபர்னு ஏதாவது வண்டி எடுத்துட்டு வந்துரு. பணத்தைப் பத்தி யோசிக்காதே. ஒரு கோல்டன் ஆப்பர்சூனிட்டி உனக்காகக் காத்துக்கிட்டிருக்கு!”
“ஓகே அங்கிள். இதோ வரேன்!”
மொபைலில் அழைப்பைத் துண்டித்து, ஊபர் ஆப் மூலமாக டாக்ஸியை அழைத்தாள். பீக் அவர் டிமாண்ட் இருந்ததால் பணம் அதிகமாகவே காட்டியது. ஆனாலும், டாக்டர் சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து, அதையே புக் பண்ணிவிட்டாள். சிறிது நேரத்தில் டாக்ஸியில் டாக்டரின் கிளினிக்கை நோக்கிச் சென்றாள்.
சிற்பிகா வசிப்பது தில்லியின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜனக்புரி பகுதியில்.
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஒன்று இது. தமிழ் பேசுகின்ற ஒரு முதிய தம்பதியின் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டில் ஒரு ரூம் இவளுக்கு ஸப்லெட்டிங் செய்யப்பட்டுள்ளது. இவளுக்கும் மாதினிக்கும் அதுவே போதுமானதாக இருக்கிறது. ஒரே ஒரு இண்டக்ஷன் ஸ்டவ்வை வைத்துக் கொண்டு ஏதோ ஓட்டிக் கொண்டிருக்கிறாள். வசதிகள் குறைவுதான்.
இருந்தாலும் நல்ல மனிதர்கள். பாதுகாப்பான இடம். தனியாக ஓர் இளம் பெண், கைக்குழந்தையுடன் வசிக்கும்போது என்னவெல்லாம் இடைஞ்சல்கள் வரும் என்பதைப் பற்றி பிஹெச். டி. தீஸிஸ் எழுதும் அளவிற்கு அனுபவங்கள், இந்த இரண்டு வருடங்களில் சிற்பிகாவிற்குக் கிடைத்துவிட்டன. வெயிலில் அலைந்த பிறகு நிழலின் அருமை தெரியும் அல்லவா, அது போலவே பல கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, இந்த முதியவர்கள் காட்டும் அன்பு இனிமையாக இருந்தது அவளுக்கு.
வேலை வேண்டும் என்று அல்லாடிக் கொண்டிருக்கிறாள். அதுதான் சரியாக இதுவரை அமையவில்லை. ஏதோ வேலை கிடைத்தாலும், வேலை செய்யும் இடத்தின் சூழ்நிலை காரணமாகவோ, சம்பளம் தருபவன் செய்கின்ற அட்டகாசங்களாலோ வேலையை இவளே இரண்டு, மூன்று மாதங்களில் ரிஸைன் செய்திருக்கிறாள்.
‘கொஞ்சம் டயம் கொடுத்திருந்தா, பேபிம்மாவை கிரெஷ்ஷில் விட்டுட்டு நிதானமாகக் கெளம்பிப் போயிருக்கலாம். அங்கிள் எதுக்காக இவ்வளவு அவசரப்படுத்தினார்னு புரியலை. இப்போ குழந்தை தூக்கத்தில் இருந்து முழிச்சுட்டான்னா, போற எடத்துல சரியாப் பேசக் கூட முடியாது’ என்று கவலைப்பட்டுக் கொண்டே பயணம் செய்தாள்.
அனுபவ் ஸாருடைய கிளினிக் இருப்பது தில்லி ஐ. ஐ. டி.க்கு அருகில் அமைந்திருக்கும் ஸர்வோதயா என்க்ளேவ் பகுதியில். தன்னுடைய பெரிய வீட்டின் ஒரு பகுதியையே கிளினிக்காக மாற்றியிருந்தார். மாடியும் கீழுமான வீட்டின் மாடி போர்ஷனின் ஒரு பகுதி கிளினிக்காக மாற்றப்பட்டிருந்தது. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியில் ஸீனியர் புரொஃபசராகப் பல வருடங்கள் பணிபுரிந்து ரிடையர் ஆனவர் என்பதால், அவருடைய அனுபவம் மற்றும் கைராசியான மருத்துவர் என்ற பெயரும் சேர்ந்து ஏகப்பட்ட பேஷன்ட்டுகளைக் கொண்டு வந்து குவித்தது அவரிடம்.
“நோ அங்கிள், நீங்க எனக்காக இரக்கப்பட்டு இந்த ஆஃபரைக் கொடுக்கறீங்க. இங்க ஏற்கெனவே வேலை பாக்கறவங்களை என்ன பண்ணுவீங்க? அப்புறம் நான் தங்கியிருக்கிற இடத்துல இருந்து இவ்வளவு தூரம் வந்துட்டுப் போணும். குழந்தையையும் கிரெஷ்ஷில் அதிக நேரம் போடணும்.
இங்க பக்கத்துல வாடகைக்கு வீடு பார்க்கலாம்னா இந்தப் பணக்கார ஏரியால வாடகை ரொம்ப அதிகமா இருக்கும். எனக்கு எந்த விதத்திலும் சரியா வராது” என்று கூறி மறுத்துவிட்டாள் சிற்பிகா. ‘இன்னைக்கு என்ன சொல்லப் போறாரோ? என்னால செய்ய முடியற வேலையா இருக்கணும்! அதோட இந்தக் குழந்தையோட வளர்ப்பிலயும் எந்த பாதிப்பும் வரக்கூடாது. நானே இவ்வளவு கண்டிஷன்களை வச்சா, அதுக்கெல்லாம் ஒத்துக்கற மாதிரி பாஸ் எப்படிக் கிடைப்பார்?’ என்று தனக்குத்தானே யோசித்து, அவள் சலித்துக் கொண்டிருந்த சமயத்தில் அனுபவ் ஸாரின் கிளினிக்கை அடைந்துவிட்டாள்.
ஜீபே மூலமாகப் பணத்தை அனுப்பிவிட்டு நிமிர்ந்த போது சரியாக மாதினி விழித்துக்கொண்டு விட்டாள். புது இடத்தைக் கண்டு லேசாகச் சிணுங்கத் தொடங்கினாள்.
“ப்ளீஸ், கம் இன் சிற்பிகா” என்று சிரித்த முகத்துடன் அவளை வரவேற்ற சிஸ்டர் ஃபிலோமினா, குழந்தையை வாங்கிக் கொண்டாள். மாதினியும் அதிசயமாக அவளிடம் தாவிவிட்டாள். கேரளத்தைச் சேர்ந்த ஃபிலோமினா சிஸ்டர், சிற்பிகாவிற்கு நல்ல பழக்கம். அவளுடைய நலம் விரும்பிகளில் அவளும் ஒருத்தி.
“சீக்கிரம் உள்ளே போ சிற்பிகா. டாக்டர் உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு. நீ பேசிட்டு வர வரைக்கும் பேபிம்மாவை நான் மேனேஜ் பண்ணிக்கறேன். கவலைப்படாம போயி நிதானமாப் பேசிட்டு வா!” என்று அனுப்பிவிட்டு, தனது கவனத்தை மாதினியிடம் திருப்பினாள் சிஸ்டர். நல்லவேளையாக, அந்தச் சமயத்தில் பேஷன்ட் யாரும் இல்லை அங்கு. பேஷன்ட்களுக்கான அன்றைய கன்சல்டிங் நேரம் முடிந்துவிட்டதென்று தோன்றியது சிற்பிகாவிற்கு.
“மே ஐ கம் இன்?” கதவை மென்மையாகத் தட்டினாள் சிற்பிகா.
“யெஸ், கமின் டியர்! வி ஆர் வெயிட்டிங் ஃபார் யூ ஒன்லி.பரவாயில்லை, நான் எதிர்பாத்ததை விடச் சீக்கிரமே வந்துட்டே. குட்!” என்று பாராட்டியபடி அவளை வரவேற்றார் அனுபவ் சின்ஹா. “குட் மார்னிங் ஸார். நீங்க சொன்னதை எப்பவும் மீற மாட்டேன்” என்று கூறியபடி, அவரெதிரில் அமர்ந்திருந்த இளைஞனைப் பார்த்தாள். அவளுடைய மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன.
‘இவனா, இவனா என்னெதிரே இருப்பது?’ என்று மனம் திரும்பத் திரும்ப அரற்றியது. ஆபத்து என்று எச்சரிக்கை மணி எங்கோ அடித்த அதே நேரத்தில், ஒருவிதமான நிம்மதியும், இனிமையும் படர்ந்தன. ‘என்றாவது ஒருநாள் நடந்தே ஆகவேண்டிய நிகழ்வு இன்று நடந்துவிட்டுப் போகட்டுமே, அதனாலென்ன’ என்று ஒருவிதமான மனநிலை உருவானது அவளுக்குள். கலவையாக எழுந்த உணர்ச்சிகளின் பிரவாகத்திற்கு அணை போட்டுத் தடுத்துவிட்டு, அவனைக் கூர்ந்து கவனித்தாள். அவனோ, அவளைப் பார்த்து நட்புடன் சிரித்தான்.
“ஸீ, சிற்பிகா, மீட் மை ஃப்ரெண்ட் ரகுநந்தன். ஆக்சுவலி, மேஜர் ரகுநந்தன். இவருக்கு உன்னை அறிமுகம் செஞ்சு வைக்கத்தான் அவசர அவசரமாக வரச் சொன்னேன்” என்று நிறுத்தினார் டாக்டர். சிற்பிகா, அவனைப் பார்த்துக் கை கூப்பினாள். “ஹலோ சிற்பிகா, நைஸ் டு மீட் யூ” என்றான் அவன்.’ஆர்மியில் வேலை பார்ப்பவனிடம் எனக்கான வேலைவாய்ப்பு எப்படி இருக்க முடியும்?’ என்ற கேள்வி அவளுடைய மனதைக் குடைந்தது. அப்போதுதான் அவனுடைய வீல் சேரையே அவள் கவனித்தாள். புரிவது போலவும் இருந்தது. குழப்பமாகவும் இருந்தது. “இவருக்கு உதவி செய்ய நீதான் பெஸ்ட்னு மனசுல தோணுச்சு. நீங்க ரெண்டு பேரும் வேலையைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுங்க.
நான் கொஞ்ச நேரத்தில் வரேன். பை தி வே, இவரும் உங்க ஊர்க்காரர்தான். ஐ மீன், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்” என்று மேலோட்டமாக ஏதோ சொல்லிவிட்டு, எழுந்து சென்றார் அனுபவ். அவர்களே மனம் விட்டுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளட்டும் என்று தனிமையை அவர்களுக்குப் பரிசாக அளித்துவிட்டுச் சென்றார். “யெஸ் மிஸ்.” “சிற்பிகா, என் பேர் சிற்பிகா, சிற்பிகான்னு நீங்க கூப்பிடலாம்.”
“சரி, சுத்தி வளைச்சுப் பேசாம டைரக்டா விஷயத்துக்கு வரேன். வேஸ்ட் பண்ணற அளவுக்கு நேரம் என்னிடம் இல்லை. என் நிலைமையைப் பார்த்தாலே உங்களால புரிஞ்சுக்க முடியும். காலில் குண்டு பாய்ந்ததால இந்த நிலைமை. இப்போ ட்ரீட்மென்ட் போயிட்டிருக்கு. அனுபவ் அங்கிள் எனக்கு ஃபேமிலி ஃப்ரண்ட் கம் வெல் விஷர். என் கூடவே என்னோட வீட்டில் தங்கி உதவி செய்ய ஒருத்தர் தேவை. வீட்டையும் கவனிச்சுக்கணும். என்னையும் சேர்த்துக் கவனிச்சுக்கணும். நிறைய வேலைகள் இருக்கு. இது இதுதான்னு என்னால வரையறுத்துச் சொல்ல முடியாது. அனுபவ் அங்கிள் கிட்ட இதைப் பத்திப் பேசிட்டிருந்தபோது உங்களைப் பத்திச் சொன்னார்”
“என்னோட வேலை என்னன்னு குறிப்பிட்டு நீங்க சரியாகச் சொன்னால்தானே நான் முடிவெடுக்க முடியும்?” “அதுதான் சொன்னேனே, வீட்டில் சமையலில் இருந்து எல்லாமே அடங்கும். வெளி வேலைகள், அப்புறம் எனக்கு ஃபிஸியோதெரப்பி நடக்கும்போது உதவி, வீட்டு நிர்வாகம்னு எல்லாத்தையும் மேனேஜ் பண்ணற பொறுப்பான ஆள் வேணும்.” “யோசிச்சு பதில் சொல்லலாமா? நான் ஒரு முறையான ஃபிஸியோதெரப்பிஸ்ட் இல்லை. அதே மாதிரி சமையல் எல்லாம் ஏதோ கொஞ்சம் மேனேஜ் பண்ணற அளவுக்குதான் தெரியும். பிரமாதமான எக்ஸ்பர்ட்லாம் கிடையாது.” “யோசிக்க டயம் கொடுக்க முடியாது என்னால. இப்பவே பதில் வேணும்!”
திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தாள். ‘என்ன இது விநோதமான வேண்டுகோளா இருக்கு! கொஞ் சம்கூட யோசிக்காமல் எப்படிப் பதில் சொல்ல முடியும்?’ என்கிற எண்ணம் ஓடியது மனதிற்குள். “எனக்குச் சம்மதம்னே வச்சுக்குவோம். உங்க வீடு எங்கே இருக்கு?” “ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கிற ஸோலன் என்கிற ஊர்ல” என்று அவன் சொன்னதும், தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.

