காங்கிரஸின் பாரம்பரியம், திமுக – அதிமுகவின் அதிகார பலம் எனப் பலமான அடித்தளம் கொண்ட சிவகங்கை மண்ணில், இம்முறை மொத்தமாக ‘ஆப்பு’ வைத்திருக்கிறது தவெக.
ஜாம்பவான்களைச் சாய்த்து நான்கு தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளிய தவெக-வின் இந்த வேகம், தென்மாவட்ட அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட, தேசிய கட்சிக்ளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் தனது ‘வெற்றிக் கோட்டையாக’ மாற்றியிருக்கிறார் விஜய்.
சிவகங்கை கோட்டையில் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத ‘சைலண்ட்’ புரட்சியைச் செய்து காட்டியிருக்கிறார் தவெக வேட்பாளர் அ. குழந்தைராணி நாச்சியார்.
55 வயதான பி.காம் பட்டதாரியான இவர், ஏற்கனவே 1996-2001 வரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நகர்மன்ற உறுப்பினராகப் பொறுப்பில் இருந்தவர்.

பின்னர் தவெகவில் இணைந்திருக்கிறார். இவரது கணவர் அருள்பிரகாசம், மகன் பசும்பொன் அகிலேஷ் ஆகியோரின் உறுதுணையோடு களமிறங்கிய இவருக்கு எதிராக நின்றவர்களோ தேர்தல் களத்தின் ஜாம்பவான்களான அதிமுகவின் மாவட்டச் செயலாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் திமுக கூட்டணியில் களமிறங்கிய முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் என நட்சத்திரப் போட்டி நிலவியது.
கருணாஸை ஆதரித்து மு.க.ஸ்டாலின், உதயநிதி என ஒரு பெரும்படையும், செந்தில்நாதனுக்குன் வககு கேட்டு எடப்பாடி போன்றோரும் வரிசை கட்டி பிரசாரம் செய்தனர்.
ஆனால் தினசரி பிரசார செலவுக்கு கூட குழந்தை ராணி நாச்சியார் மிகுந்த பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியதாக தவெகவினர் கூறுகின்றனர்.

இரட்டை இலைக்கும் , உதய சூரியனுக்கும் இடையேதான் இங்கு கடும்போட்டி என்று கருதப்பட்டு வந்த நிலையில் இரண்டு பெரும் துருவங்களையும் பின்னுக்குத் தள்ளி, சிவகங்கை மண்ணில் தவெக-வின் கொடியை நட்டு ‘வாகை’ சூடியிருக்கிறார் இந்த நாச்சியார்.
தளபதி விஜய்யின் அரசியல் வருகைக்குச் சிவகங்கை மக்கள் தந்துள்ள இந்த வெற்றிப் பரிசு, தமிழக அரசியலில் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது!