
ஆலமரங்கள் நிறைந்த வனத்தில் கயிலைவாசன், காளியுடன் நர்த்தனம் புரிந்த தலங்கள் எல்லாம் ஆலங்காடு என்ற அடைமொழியாலேயே அழைக்கப்படுகின்றன. அந்த வகையில் பலரும் அறிந்த வட ஆலங்காடு, தென் ஆலங்காடு போலவே மற்றொரு விசேஷமான ஆலங்காடும் உண்டு. தலை ஆலங்காடு என்று போற்றப்படும் அந்தத் தலைசிறந்த திருத்தலம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.
இங்கே பாலாம்பிகை சமேதராக அருளும் நர்த்தனபுரீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகளைப் பார்க்கலாம். தாருகாவனத்து முனிவர்கள் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற எண்ணத்துடன் செருக்குற்றுத் திரிந்தபோது சிவபெருமான் பிட்சாடனர் வடிவம் ஏற்று அவர்களை கர்வபங்கம் செய்தார். அதனால் ஆத்திரமடைந்த அம்முனிவர்கள் ஆபிச்சார வேள்வி செய்து அக்னி, யானை, மான், நாகம், மழு ஆகியவற்றை இறைவன் மீது ஏவ, அவர் அவற்றைத் தமக்குரியதாக்கிக் கொண்டார். கரி உரித்து வீரட்டகாசம் செய்த இறைவன் இறுதியாக அவர்கள் ஏவிய முயலகன் மீது தமது திருப்பாதங்களை ஊன்றி ஆனந்த நர்த்தனம் செய்து காட்சி கொடுத்த தலம்தான், இந்த தலையாலங்காடு என்கிறது கோயில் புராணம்.
பொதுவாக ஆலமரங்கள் நிறைந்த காட்டில் சிவபெருமான் மிகுந்த விருப்பத்துடன் திருநடனம் செய்வதாக ஞானநூல்கள் போற்றுகின்றன. வடம் என்றால் ஆலமரம். எனவே இந்த ஆலங் காட்டீசரை வடாரண்யேஸ்வரர் என்று குறிப்பது வழக்கம். ஆலங்காட்டுத் தலங்களுள் இது முதன்மையானது என்பதைக் குறிப்பதற்காகவே தலையாலங்காடு (முகவடாரண்யம்) என்கிற பெயரால் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
புராண வரலாற்றின்படி பலயுகங்களைத் தாண்டிய தொன்பெருமை உடைய ஆலயம். கோயில் கிழக்கு நோக்கியிருக்கிறது. ராஜகோபுரம் முன்பு இருந்திருக்கிறது. தற்பொழுது கல்ஹாரத்துடன் தோரண வாயில் போன்ற அமைப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது. மூலவர் நர்த்தனபுரீஸ்வரர் என்கிற ஆடல்வல்லநாதர். நீண்ட பாணம் மற்றும் அழகிய சதுர ஆவுடையாருடன் கூடிய பழைமையான திருமேனி. நல்ல அதிர்வுகளை உடைய சந்நதி. அர்த்த மண்டபத்தில் உள்ள துவார கணபதி, துவார சண்முகர் திருமேனிகளும் தொன்மையானவை.
சபாமண்டபத்தின் இடதுபுறத்தில் இத்தலத் திற்குரிய நாயகரான நடராஜப் பெருமான், சிவகாமசுந்தரி அம்மையுடன் சந்நதி கொண்டிருக் கிறார். திருவாலங்காட்டினைப் போன்றே இடது புறத்தில் மணிவாசகப் பெருந்தகையும் வலது புறத்தில் காரைக்கால் அம்மையாரும் காட்சி தருவது சிறப்பு. பிற்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தவர்களால் செய்தளிக்கப்பட்ட பெரிய உலோகத்திருமேனி இது என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்குரிய ஆறு நடராஜர் அபிஷேகங்களும் இத்தலத்தில் விசேஷமாக நிகழ்த்தப்படுகின்றன.
மகாமண்டபத்தில் வலது புறம் கணபதியும் இடது புறம் சரஸ்வதியும் உள்ளனர். மையக் கோயிலுக்கு வலதுபுறத்தில் விஸ்வநாதர் தனித்து காட்சியளிப்பது விசேஷம். இவர்தான் சுபிலமுனிவருக்குக் காட்சியருளியவர் என்கிறார்கள். கோஷ்ட மூர்த்தங்கள் அந்நியர் படை யெடுப்புகளினால் களவாடப்பட்டிருக்கின்றன. ஏனைய சிவ பரிவாரங்கள் அனைவரும் அவரவர்க்கு உரிய ஸ்தானங்களில் அமைந் துள்ளனர். இடது புற பிராகாரத்தில் காளி தேவியின் சிறிய திருமேனியை தரிசிக்கலாம். இவ்வம்மைக்கு நேராக தலவிருட்சமாகிய பலா மரம் உள்ளது.
சிவபெருமான், அப்பர் சுவாமிகளுக்கு ஆடி அமாவாசை அன்று திருவையாறில் காட்சியளித்ததைப் போல, தை அமாவாசை அன்று இத்தலத்தில் காட்சி அளித்தாராம். அந்த ஐதிகத்தின் அடிப்படையில் கருவறை விமானத்தில் பஞ்சமூர்த்திகளும் காட்சி தரும்படியாக எழுந்தருளியுள்ள மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுற்றாலையில் உள்ள பலா மரத்தினடியில் இருந்து இந்த மண்டபக்காட்சியினை அப்பர் சுவாமிகள் தரிசித்தாராம். இந்நினைவினைப் போற்றிடும் வகையில் தை அமாவாசை அன்று சுவாமி திருவுலா செய்யும் சமயத்தில் இந்த காளி அம்மனுக்கு விசேஷ ஆராதனைகளும் தலவிருட்சத்திற்கு தீபாராதனையும் செய்யப்படுகிறது. அன்றைய தினத்தில் இங்கிருந்து மேலே உள்ள பஞ்ச மூர்த்திகள் மண்டபத்தினை தரிசித்தால் முக்திப்பேறு நிச்சயம் என்கிறார்கள்.
அதேபோல், கலைமகளின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ஜோதி சொரூபமாகக் காட்சியளித்த தலம் இது. தொன்மையான வீணையில்லாத சரஸ்வதி திருமேனி, சுற்றாலையில் தனித்த மண்டபத்தில் உள்ளது. நவமி தினங்களில் இவ்வன்னையை அபிஷேகித்து வழிபட கல்வி ஞானம் சிறக்கும். குறிப்பாக வாய்ப்பாட்டு மற்றும் நடனத் துறையில் சிறந்து விளங்கிட எண்ணுவோர், இத்தலத்து நடனபுரீஸ்வரருடன் சரஸ்வதி தேவியையும் வணங்கிச் செல்லுதல் இன்றளவும்
கலைமகளுக்கு அருகிலேயே இரட்டை பைரவர்கள் காட்சி அருளுகின்றனர்.
இவர்களுள் ஒருவர் சரஸ்வதி தேவிக்கு அனுகிரஹித்த பைரவர் என்கிறார்கள். இத்தல தீர்த்தம், சங்கு தீர்த்தம் எனப் படுகிறது. கிருதயுகத்தில் சுபில முனிவர் இத்தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு தனது தோல் நிறமாற்ற நோயை போக்கிக் கொண்டதுடன் சிந்தாமணி ரத்தினத்தினையும் பெற்று மகிழ்ந்தார் என்பது தலபுராணச் செய்தி. இன்றளவும் இக்குளத்தில் தானாகவே நீர் ஊறுவது அதிசயம். அன்றி அருகிலுள்ள ஆற்றுநீரால் நிரம்புவது கிடையாது என்று சொல்லி அதிசயிக்க வைக்கிறார்கள் இங்குள்ளவர்கள்.
இத்தீர்த்தத்தில் நீராடி நெய்தீபமேற்றி வழிபடுவோர் பலன் பெறுவது இன்றுவரை கண்கூடான உண்மை எனவும் சொல்கின்றனர். ஒரு சமயம் காஞ்சி மகாசரணர் இவ் வாலயத்தில் ஒருமண்டலம் தங்கியிருந்து இக்குளத்தில் நீராடி இறைவனை தினசரி வழிபட்டிருக்கிறார் என்று சிலிர்ப்புடன் கூறுகிறார்கள். புராண காலத்தில் இப்பூமியில் ஏராளமான சிவலிங்கங்கள் இருப்பது கண்டு அவற்றை மிதிக்க அஞ்சிய கபில முனிவர் தம் தலையாலேயே நடந்து வந்து தரிசித்துள்ளார் என்பதால் இது தலை ஆலங்காடு என வழங்கப்பட்டது என்றும் புராணக்கதை ஒன்று உள்ளது.
புகழ்பெற்ற தலையாலங்கானத்துப் போர் நிகழ்ந்த தலம் இது. பாண்டியன், சிறு பிராயத்தினன். ஒரே சமயத்தில் பகைமை கொண்ட மூவேந்தர்களும் முற்றுகையிட்ட போது இவ்வாலயத்து ஈசனைப் பணிந்து வேண்டினான், பாண்டியன். ஆலயத்து வடபாகத்தில் சாந்நித்யம் கொண்டுள்ள சம்ஹாரகோலத்துக் காளியை வழிபட்டுச் சென்றால் வெற்றி நிச்சயம் என்று அசரீரி வாயிலாக இறையின் உத்தரவு கிடைத்தது. அதன்படி மூவேந்தர்களையும் வென்று வழிபட்ட அரசன், எதிரிகளான செருவென்ற பாண்டியன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் என்ற அழியாத புகழ் பெற்றான். பத்துக் கரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தந்திடும் இக்காளியை செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்ட பிறகு செய்கிற செயல்களில் முழுவெற்றிகிட்டும் என்கிறார்கள்.
அம்பிகை பாலாம்பிகை, அழகு மிக்க திருவினள். முன்பு, தனித்திருந்துள்ளது அம்பி கோயில். இப்பொழுது ஒரே வளாகத்திற்குள் தரிசித்து விடலாம். மிகுந்த வரப்பிரசாதி இந்த பாலாம்பிகை. வாத நோய் உள்ளவர்கள் இத்தலத்து அம்பிகைக்கும் சுவாமிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நிவாரணம் கிட்டுமாம்.
அம்பிகைக்கு அருகிலேயே தனித்த சன்னதியில், சனைச்சரன் காட்சியளிக்கிறார். சனிதோஷம் நீங்கிட இவரை வணங்குகிறார்கள். அப்பரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் வழிபட்ட இத்தலம், பாடல்பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 93வது திருத்தலம்.
12ஆம் நூற்றாண்டு காலத்துக் கவ்வெட்டுகள் உள்ளன. இக்கோயில் முற்காலத்தில் மூன்று பிராகாரங்களை உடைய மிகப்பெரிய ஆலயமாக இருந்திருக்கின்றது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டதால் சிதையத் தொடங்கிய கோயில், தற்பொழுது பெருமளவு சுருங்கியிருக்கிறது. ஆடல்வல்லான் திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால், ஆனித்திருமஞ் சன தினத்தன்று இவ்வாலயத்தில் வழிபடுவது அதீதமான நற்பலன்களை அள்ளித் தந்திடும் என்பது நம்பிக்கை