ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் கதவைத் தட்டினர். சாவை நேரில் கைகுலுக்கி வரவேற்றார் வோல்கோவ். வந்தவர்கள் எந்த விசாரணையுமின்றி சுட்டுக் கொன்றுவிடுவார்கள். அப்படித்தான் அவர் எதிர்பார்த்தார். ஆனால் வந்தவர்கள் ரஷ்யா அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்தனர்.
விசாரணை என்ற பெயரில் ரஷ்யாவில் சித்ரவதை செய்வார்கள். இறுதியில் கொலை. தாய் மண்ணில் வைத்து உயிரை விடப் போகிறோம். வோல்கோவ் அனைத்தையும் மனக் கண்ணில் ஓட்டிப் பார்த்தார். மயக்க மருந்து செலுத்தும்போது அவர் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. ஆனால், அவர் மனைவிக்குத்தான் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.
தூதரகத்தில் பணிபுரிந்தவர்களைக் கைது செய்ய, தூதரகம் அமைந்திருக்கும் நாட்டின் அனுமதி தேவையில்லை. அதனால், சட்டவிரோதக் கைதை எந்த எதிர்ப்புமின்றி ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். பொருட்களை விமானத்தில் அனுப்பும் நீண்ட பைகள் இரண்டை எடுத்தனர். அதில் இருவரையும் திணித்தனர். காரில் பார்சலை ஏற்றுவதுபோல பாவனை காட்டி வோல்கோவையும் அவர் மனைவியையும் விமான நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
விமான நிலையத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் சுங்க – குடிவரவுத் துறை சோதனை தூதரக அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்படுவது கிடையாது. அதனால், எந்தப் பதற்றமும் இல்லாமல் மெதுவாக பார்சல்களை இறக்கினர். தயாராக இருந்த சோவியத் யூனியனின் ராணுவ விமானத்தில் இருவரையும் ஏற்றி மாஸ்கோவுக்கு கொண்டு சென்றனர். இருவரின் கதியும் என்ன ஆனது என்பது வரலாற்றின் இருண்ட பக்கங்களில் மறைந்து விட்டது.
உளவுத்துறையின் ரகசிய அறையில் வைத்து நாட்கணக்கில் விசாரணை நடந்திருக்கலாம். கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்பு வோல்கோவ் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம். மனைவிக்கு துரோகத்தில் பங்கு இருக்காது என்பதால், அவர் சிறையில் அடைக்கப்பட்டு இறந்திருக்கலாம். எல்லாமே யூகம்தான். இது எதுவுமே Section IX பிரிவு தலைவர் கிம் ஃபில்பிக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர் இஸ்தான்புல் போய் இறங்கும்போது, வோல்கோவ் என்ற துரோகி அங்கு இல்லை.
அந்த துரோகி வைத்திருந்த ரகசிய தகவல் பிரிட்டனுக்கு கிடைக்காமலேயே போய்விட்டது. அந்நாட்டு உளவுத்துறையை மட்டுமல்ல, சூரியன் மறையாத ஐக்கிய ராஜ்ஜியத்தையே அசைத்துப் பார்த்திருக்கும் அந்தத் தகவல் கிடைக்காமலேயே போய்விட்டது.
அப்படிச் சொல்ல முடியாது. வோல்கோவ் வைத்திருந்த ரகசிய தகவல், பிரிட்டன் உளவுத்துறைக்குத் தெரியுமோ தெரியாதோ, அந்த நபருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். லண்டனில் உள்ள உளவுத்துறையின் ஒரு பிரிவை வழி நடத்தும் அந்த ‘ரஷ்ய தோழருக்கு’ நிச்சயம் தெரிந்திருக்கும். சிவப்பு ட்ரோஜன் குதிரைக்கு அந்தத் தகவல்கள் தெரிந்ததால்தானே வோல்கோவ் கடத்தி, தடம் தெரியாமல் அழிக்கப்பட்டார்.
(தொடரும்)