
படம் அவுட்… பாட்டு ஹிட்டு! -வி.ராம்ஜி
பெண்களுக்கும் மலர்களுக்கும் தான் சம்பந்தம் உண்டு, தெய்வங்களை வழிபடும் வகையில் தெய்வங்களுக்கும் பூக்களுக்கும் தான் தொடர்பு உண்டு. அதேசமயத்தில், பாடல்களுக்கும் பூக்களுக்கும் இனம்புரியாத, இணைபிரியாத தொடர்பு சங்ககாலம் முதல் நம்மகாலம் வரை இருந்துகொண்டே இருக்கிறது. ’நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்’ என்று காதல் பாட்டிலும் பூ உண்டு.
‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’ என்று தங்கைப் பாசப்பாடலில் பூவின் மணம் வீசுகிறது. மலர்களில் குறிஞ்சிப்பூ 12 வருடங்களுக்கு ஒருமுறைதான் பூக்கும். தமிழ் சினிமாவில், கவிஞர்கள் நினைத்துவிட்டால், தினமும் பூக்கும் குறிஞ்சி. அப்படியொரு குறிஞ்சிப்பாட்டுதான் ‘மலரே… குறிஞ்சிமலரே…’ பாட்டு!
1975ம் ஆண்டு, சிவாஜி, மஞ்சுளா நடிப்பில் வெளியானது ‘டாக்டர் சிவா’. அது எம்ஜிஆர் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து சினிமாவுக்குள் அரசியலையும் கட்சிக் கொடியையும் பாப்புலராக்கிக்கொண்டிருந்த காலம்.
ஜெய்சங்கரின் மார்க்கெடும் சிவகுமாரின் கால்ஷீட்டும் முக்கியத்துவம் பெற்றன. எம்ஜிஆர் – சிவாஜியை அடுத்து கமல் – ரஜினி என்பதெல்லாம் அப்போது தெரியவில்லை. கமலுக்கும் ரஜினிக்கும் மளமளவென படங்கள் வந்துகொண்டிருந்தன. முத்துராமனும் ஜெய்சங்கரும் ஹீரோவாக வலம் வந்தார்கள். ஸ்ரீகாந்த் ஒரு படத்தில் கெட்டவன், இன்னொரு படத்தில் நல்லவன் என ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருந்தார்.
எம்ஜிஆர் – சரோஜாதேவி ஜோடி பேசப்பட்டது ஒருகாலம். அதையடுத்து எம்ஜிஆர் – ஜெயலலிதா ஜோடி போட்டு ஹிட்டுகளைக் குவித்தார்கள். எழுபதுகளில், மஞ்சுளா வந்தார். எம்ஜிஆர் – ஜெயலலிதா முடிவு குறைந்தது. பிறகு லதா வந்தார். முழுவதுமாக அந்த ஜோடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதைப்பற்றிய பேச்சுதான் அப்போதெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் மக்களிடையே..! இத்தனைக்கும் நடுவே, ‘நான் நடித்துக்கொண்டே இருப்பேன்’ என வரிசைவரிசையாக படங்களில் நடித்தார் சிவாஜி. ஜெயலலிதாவுடன் ஒரு படம், மஞ்சுளாவுடன் ஒருபடம், லதாவுடன் ஒருபடம், வாணிஸ்ரீயுடன் ஒருபடம் என்று சிவாஜி படங்களைத் தந்துகொண்டே இருந்தார்.
‘அன்பே ஆருயிரே’, ‘மன்னவன் வந்தானடி’, ‘பாட்டும் பரதமும்’ ‘வைரநெஞ்சம்’ படங்கள் இந்த வருடத்தில் வந்து, சிவாஜி ரசிகர்களுக்கு சோகத்தைத் தந்தன. ‘சினிமா பைத்தியம்’, ‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்று கெளரவ வேடத்தில் வந்ததை மட்டும் பெருமையுடன் சொல்லிக்கொண்டார்கள் ரசிகர்கள். நடிகர்திலகத்தின் நிலை இப்படி; மக்கள் திலகத்துக்கு ‘நாளை நமதே’, ‘இதயக்கனி’, ‘நினைத்ததை முடிப்பவன்’ என்று வந்தன.
’பல்லாண்டு வாழ்க’ என்றெல்லாம் வந்தாலும் எதுவும் பெரிதாக வாழவில்லை. இந்தக் காலகட்டத்தில் கிளாமருக்கும் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்த படங்களாக, எம்ஜிஆர் படங்கள் இருந்தன என்பதுதான் வரலாறு. எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் டிஎம்எஸ் இன்னமும் பாடிக்கொண்டுதான் இருந்தார். ஆனாலும் எஸ்பிபி பாடினார். ஜேசுதாஸ் பாடினார்.
’டாக்டர் சிவா’வைப் பார்ப்போம். வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில், ‘டாக்டராகணும்னா முதல்ல பேஷண்டா இருக்கணும்னு சொல்லுவீங்க போல..’ என்று கிரேஸி மோகன் டயலாக் எழுதியிருப்பார். அதாவது டாக்டர் சிவா, கதைக் கட்டமைப்பில் ‘பேஷண்ட் சிவா’ என்று, எம்ஜிஆர் ரசிகர்களெல்லாம் சிவாஜி படத்தை ஓட்டினார்கள். ஆனால், மெல்லிசை மன்னர் படத்துக்கு டிரிப்ஸ் ஏற்றினார்.
கவிஞர் வாலி தன் வரிகளின் மூலம் நரம்புகளுக்குள் எனர்ஜியை ஏற்றினார். எஸ் ஜானகியம்மா பாடலுக்கு குளுக்கோஸ் குரலை வழங்கினார். கேஜே ஜேசுதாஸ், ‘ஆபரேஷன் சக்ஸஸ்’ என மாற்றினார். அதுதான், ‘மலரே குறிஞ்சிமலரே’ பாட்டு!
’டாக்டர் சிவா’ படத்தில் பல பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு தினுசு என்றாலும் ‘குறிஞ்சி மலரே’ பாட்டு உண்மையில் குறிஞ்சிப்பூ போல அபூர்வம்தான்! இரவுகளில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்றைக்கும் கேட்கின்ற பாடல்… ‘மலரே குறிஞ்சி மலரே’. முதல் வரியை ஜேசுதாஸ் பாடும்போதே, நாம் மட்டுமின்றி அந்தக் குறிஞ்சிப்பூவே பூக்கத்தொடங்கிவிடும்.
மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
என்று ஜேசுதாஸ் பாடுவார். சிதார், வீணை, தபேலா, புல்லாங்குழல் என்று குறிஞ்சியை வரவேற்கும். காதலை வளர்க்கும். இல்லறத்தின் உன்னதம் சொல்லும். அப்போது ஜானகியம்மா பாடலைத் தொடர்வார்.
யார் மடி சுமந்து தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ என்று சொல்லும்போதே, கேட்கிற ஆண்களெல்லாம் பெண்மையைக் கொண்டாடனும் என நினைத்துக்கொள்வார்கள். கவனிக்கவும்… ‘நினைத்துக்கொள்வார்கள்!’
கொடி அரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனைத் சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
என்று வாலியின் வரிகள் தெய்வாம்சத்தை அள்ளித் தரும். குறிஞ்சிப்பூவின் நறுமணம் நமக்கென்ன தெரியும்? ஆனால் இந்தப் பாடல், குறிஞ்சி தரும் வாசனையை நம் நாசிக்குள் சேர்த்துவிடும்.
நாயகன் நிழலே நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்
தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
என்று கணவன் மனைவி எனும் ஆயுள் பரியந்த உறவின் அடர்த்தியைச் சொல்லும் வரிகள் நம்மை தடக்கென சோகத்துக்குள் சுகமாகத் தள்ளும். சொல்லப்போனால், இந்தப் பாடல் காட்சி சோகமாக இருக்காது. ஆனால், பாடலைக் கேட்கும்போதெல்லாம், மெல்லிய இழையாக சோகம் ஏனோ எட்டிப்பார்க்கும்.
பாடிடும் காற்றே பறவையின் இனமே
பனி மலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களேன்
பால் மனம் ஒன்று
பூ மனம் ஒன்று
காதலில் இன்று கலந்தது கண்டு
நல்வாழ்த்து கூறுங்களேன்
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
1975ம் ஆண்டு நமக்குக் கிடைத்த பாடல்களில், மிக முக்கியமான பாடல் இது. ‘டாக்டர் சிவா’ எனும் திரைப்படத்தை நாம் மறக்காமல் நினைவில் வைத்திருப்பதற்கு, மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன், கவிஞர் வாலி, கேஜே ஜேசுதாஸ், ஜானகியம்மாதான் காரணம் என்பதைச் சொன்னால், ‘ஆமாம்பா ஆமாம்’ என்று சிவாஜியே வந்து சொல்லிவிட்டுச் செல்வார்.
மிக அழகான மெலடிப்பாட்டு. அற்புதமான டூயட் பாட்டு. காதலைக் கவிதையாகச் சொன்ன பாட்டு. ஜேசுதாஸின் குரலில் அன்பும் வாஞ்சையும் குழைந்துவழியும்; ஜானகியம்மாவின் குரலில் காதலும் பேரன்பும் ததும்பிப் பிரவாகமெடுக்கும். .இன்றைய இரவில் ‘மலரே… குறிஞ்சி மலரே’வை காதையும் மனசையும் கொடுத்துக் கேளுங்கள்.
பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூக்கிற குறிஞ்சி, உங்களுக்காக இன்றைக்கே பூக்கலாம்; இன்றைக்கும் கேட்டு, மறுநாளும் கேளுங்கள். நாளைக்கும் பூக்கும் குறிஞ்சி!