நடந்து முடிந்த சீரியல் இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் ஓர் அணியிலிருந்தும் செயலாளர், பொருளாளர்கள் வேறு அணியிலிருந்தும் தேர்வாகி இருப்பதால், சங்கம் தொடர்ந்து சுமுகமாக இயங்குமா என்கிற குழப்பம் உறுப்பினர்களிடையே எழுந்துள்ளது.
சீரியல் இயக்குநர்கள் சங்கத் தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. தற்போதைய தலைவர் மங்கை அரிராஜன் தலைமையில் ஓர் அணி, கவிதா பாரதி தலைமையில் ஓர் அணி, ஆதித்யா, சுகன்குமார், விக்ராந்த் ஆகியோர் தலைமையில் தலா ஓர் அணி என ஐந்து அணிகள் களத்திலிருந்தன.
காலை முதல் மாலை வரை வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், அடுத்த சில மணி நேரத்திலேயே வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் மங்கை அரிராஜனே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கவிதா பாரதி தோல்வியடைந்தார்.

அதே நேரம் செயலாளர், பொருளாளர் பதவிகளை கவிதா பாரதி அணி கைப்பற்றியது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மங்கை அரிராஜன் அணி தலைவர் உள்ளிட்ட மூன்று இடங்களையும் கவிதா பாரதி அணி செயலாளர், பொருளாளர் உட்பட ஆறு இடங்களையும் கைப்பற்றின. ஆதித்யா அணியிலிருந்து 4 பேரும், சுகன்குமார் அணியிலிருந்து இருவரும் தேர்வானார்கள்.
விக்ராந்த் அணிக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.
சமீபத்தில் நடந்த திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் இதே போன்ற முடிவுகள் வெளியானது நினைவிருக்கலாம்.
தற்போதைக்கு கவிதா பாரதி அணி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தாலும் தலைவராக அவர் வெற்றி பெறாத நிலையில், அவரது ஆதரவாளர்கள் மங்கை அரிராஜனுடன் ஒற்றுமையாக இணைந்து பணிபுரிவார்களா என்பது தெரியவில்லை.
மங்கை அரிராஜனிடம் பேசியபோது, “உறுப்பினர்கள் கலவையா வாக்களிக்கணும்னு நினைச்சிருக்காங்க. வேறென்ன சொல்வது. சங்கம் சுமுகமா நடக்கறது இப்ப தேர்வாகிற ஒவ்வொருத்தரோட முடிவுலயும்தான் இருக்கு” என்கிறார்.