“சூர்யவன்ஷி முதல்ல தண்ணீர் பாட்டில் தூக்கணும்..” அஷ்வின் சொன்ன கருத்து.. அதிர்ந்த நெட்டிசன்கள் | India vs Ireland T20: R Ashwin on Vaibhav Suryavanshi, says he can wait for little bit longer

Spread the love

Cricket

oi-Vigneshkumar

சென்னை: இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு தரப்பட வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இருப்பினும், அவர் வெளியே உட்கார்வதில் தவறில்லை எனச் சொல்லியிருக்கும் அஷ்வின், அப்போது தான் பக்குவத்தை கற்றுக் கொள்வார் என்றார். மேலும், வைபவ் தண்ணீர் பாட்டில் தூக்குவதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டார்.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் அறிமுகமாவார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், இந்திய அணி நிர்வாகம் உலகக் கோப்பை வென்ற அனுபவம் வாய்ந்த தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடிக்கே முன்னுரிமை அளித்தது. இதனால் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

India vs Ireland R Ashwin on Vaibhav Suryavanshi

அஸ்வின்

இந்த முடிவை ஆதரித்துப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இளம் வீரர்களை அவசரப்பட்டு சர்வதேச அரங்கில் களம் இறக்குவதை விட, அவர்கள் நிதானமாக வளர்வதற்கு ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தனது யூடியூப் சேனலில் இது குறித்துப் பேசிய அவர், சர்வதேச கிரிக்கெட்டின் நுணுக்கங்களைக் களத்திற்கு வெளியில் இருந்தும் கற்றுக் கொள்ளலாம் என்றும் அது வீரர்களின் வளர்ச்சிக்குப் பெரியளவில் உதவும் என்றும் தெரிவித்தார்.

சரியாக இருக்காது

சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கியது சரியான முடிவு கூறிய அஸ்வின், உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் மிக சிறப்பாக விளையாடினார் என்பதை நினைவு கூர்ந்தார். அவர் மேலும் கூறுகையில், “வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களில் ஒருவரை (சஞ்சு- அபிஷேக்) அணியில் இருந்து நீக்கினால், அது சரியாக இருக்காது.

தண்ணீர் பாட்டில்

வைபவ் சூர்யவன்ஷி ஒரு சிறந்த என்டர்டெய்னர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் அணிக்குள் வர ஒரு தகுந்த நேரம் வரவேண்டும். அதுவரை அவர் வெளியே இருக்கட்டும். அதில் தவறில்லை.. வெளியே இருந்தாலும் பல நுணுக்கங்களை அவரால் கற்றுக் கொள்ள முடியும். அதுவரை வீரர்களுக்குத் தண்ணீர் பாட்டில் தூக்கட்டும். தவறில்லை.. இதுபோல உதவி செய்வது ஒரு வீரருக்கு நல்ல அனுபவத்தையும் பக்குவத்தையும் தரும். இப்போது அணியில் உள்ள அனைவரும் தண்ணீர் பாட்டில் தூக்கியுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கரைப் போல ஒருமுறை வைபவ் விளையாடத் தொடங்கிவிட்டால், அதன் பிறகு அவர் அணியில் இருந்து நீக்கப்பட மாட்டார். அதற்கு முன்பாக வெளியிலிருந்து ஆட்டத்தைக் கவனிப்பது அணியின் சூழலைப் புரிந்து கொள்ளவும், சக வீரர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் உதவும்” என்று அஸ்வின் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

இந்திய அணி

மறுபுறம், புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்தத் தொடரில் இறங்கிய இந்திய அணிக்கு முதல் போட்டியிலேயே அதிர்ச்சி தோல்வி காத்திருந்தது. டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி விளையாடிய முதல் சர்வதேச டி20 போட்டி இதுவாகும். இதில் அயர்லாந்து அணி, இந்தியாவிற்கு எதிராக தனது வரலாற்றிலேயே முதல் முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தது. பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் உலக சாம்பியனான இந்தியாவை வீழ்த்தியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, ஆரம்பத்தில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த போதிலும், கேப்டன் லோர்கன் டக்கரின் சிறப்பான அரைசதம் மற்றும் கரேத் டெலானியின் அதிரடியான 49 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய ஹர்ஷித் ராணா 24 ரன்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அதிர்ச்சி தோல்வி

தொடர்ந்து 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அரைசதம் கடந்து அதிரடி தொடக்கம் தந்தார். ஆனால், அவர் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஒட்டுமொத்தமாகச் சரிந்தது. இதன் காரணமாக இந்திய அணி 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைச் சந்தித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *