பாமாயிலில் சாச்சுரேட்டடு ஃபேட் (Saturated Fat) சற்றே அதிகமாக உள்ளது. எனவே, இதை அதிக அளவில், நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL Cholesterol) அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் மிக அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்படுவதால், அவற்றில் உள்ள பல நல்ல பண்புகளும், ஊட்டச்சத்துகளும் அழிந்துவிடுகின்றன.
நீங்கள் எந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைவிட, எவ்வளவு எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியம். எந்த எண்ணெயாக இருந்தாலும் அதன் அளவு கட்டுப்படுத்தப் பட வேண்டும். சமைக்கும் போது எண்ணெயை அப்படியே பாத்திரத்தில் ஊற்றுதையும், பெரிய கரண்டிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
எண்ணெய் பயன்பாட்டின் அளவைக் குறைக்க ஸ்பிரே (Spray) பாட்டில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிறிய அளவிலான ஸ்பூன்களையும் பயன்படுத்துங்கள்.
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது. எண்ணெய் மீதமாகிவிட்டதே, வீணாகிறதே… என்று நினைத்து, அதனைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினால், அதில் “டிரான்ஸ் ஃபேட்ஸ்’ (Trans Fats) உருவாகும். இது உங்களது உடலுக்கு மேலும் அதிக கெடுதலை விளைவிக்கும்.

முடிந்தால் சமையல் முறையை ஆரோக்கியமாக மாற்றுங்கள். உணவுகளை எண்ணெயில் பொரிப்பதையோ (Deep Fry) அல்லது அதிக எண்ணெய் ஊற்றி வதக்குவதையோ (Heavy Saute) தவிர்த்து விடுங்கள்.
அதற்கு பதிலாக, ஆவியில் வேகவைப்பது (Steaming), அவிப்பது (Boiling), பிரஷர் குக்கிங் (Pressure Cooking) போன்ற ஆரோக்கியமான சமையல் முறைகளைப் பின்பற்றுங்கள்.
உணவில் நார்ச்சத்தை அதிகரியுங்கள். அதற்கு உங்களது அன்றாட உணவில் அதிக அளவிலான காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ரேஷன் கடையில் கிடைக்கும் பாமாயிலைப் பயன்படுத்துவதால் கட்டாயமாக இதய நோய் (Heart Disease) வந்துவிடும் என்று அர்த்தமல்ல. நாம் எந்த எண்ணெயை எப்படி, எந்த அளவில் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். எனவே, அளவறிந்து கவனமாகப் பயன்படுத்தினால் ஆரோக்கியமாக வாழலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.