செங்கல்பட்டு: மரகத முருகன் சிலை திருட்டு – மர்ம கும்பல் கைவரிசை காட்டியது எப்படி?

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது பால தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரகதத்தால் ஆன மூலவர் முருக்ன் சிலை இருந்தது. சம்பவத்தன்று இரவு கோயிலின் பூட்டை உடைத்து, முருகன் சிலையை திருடிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. வழக்கம்போல கோயிலின் நடையை திறக்க வந்தவர்கள், மரகதத்தால் ஆன முருகன் சிலை திருட்டு போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து சித்தாமூர் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சிலை திருட்டு எப்படி நடந்தது என விசாரித்தனர். மேலும் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது தங்களின் முகம் சி.சி.டி.வியில் பதிவாகாமலிருக்க மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் கேமராவில் கறுப்பு நிற பெயின்ட்டை அடித்தது தெரியவந்தது. அதனால் இந்தத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று தெரியவில்லை.

மரகத முருகன் சிலை திருட்டு

மரகத முருகன் சிலை திருட்டு

இது குறித்து போலீஸார் கூறுகையில், “இந்தக் கோயிலில் 2 அடி உயர மரகத மூலவர் சிலை இருந்தது. அதன்மதிப்பு பல கோடி ரூபாயாகும். அதனால், மூலவர் சிலையை கருவறையில் இரும்பு பெட்டகத்தில் மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருந்தனர். சிலை வைக்கப்பட்டிருந்த கருவறையிலும் அதைச் சுற்றியிலும் சி.சி.டி.வி-க்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும் கோயிலில் செக்யூரிட்டிகளும் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். சம்பவத்தன்று மலையின் கீழ் பகுதியில்தான் இரவில் செக்யூரிட்டி இருந்திருக்கிறார். அதனால், பின்பக்க மலை வழியாக ஏறி திருடர்கள் கோயிலுக்குள் வந்திருக்கிறார்கள். இந்தக் கோயிலின் அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் தெரிந்திருந்த மர்ம கும்பல், முதலில் அலாரம் அடிக்காமலிருக்க அதன் இணைப்புகளை துண்டித்திருக்கிறார்கள். பிறகு சி.சி.டி.வி கேமராக்களில் கறுப்பு நிற பெயின்ட்டை அடித்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் கைவரிசை காட்டியிருக்கிறார்கள். மரகத முருகன் சிலை திருட்டு சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் பகுதியில் உள்ள சி.சி.டி.வி-க்களை ஆய்வு செய்து வருகிறோம். மரகத சிலை குறித்து நன்கு தெரிந்த சிலைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களே இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதனால் சிலைக் கடத்தல் வழக்குகளில் கைதானவர்களின் விவரங்களையும் சேகரித்து வருகிறோம்”‘ என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *