செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு சாலையைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது 7 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 11-ம் தேதி சிறுமியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் 12-ம் தேதி அதிகாலை சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சிறுமியைத் தேடும் பணிக்காக 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தியதுடன், ஆலம்பூண்டி கிராமத்தில் வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொண்டு, பொதுமக்களிடமும் விசாரணை நடத்தினர்.
மேலும், சத்தியமங்கலம், ஆலம்பூண்டி, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிணறுகள், குட்டைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
ஆலம்பூண்டி பகுதியில் உள்ள பாறை இடுக்குகள் மற்றும் மலைக்குன்றுகளிலும் டிரோன்கள் மூலம் தேடுதல் நடத்தப்பட்டது. சிறுமி மாயமான அன்று மோப்பநாய், அவரது வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று நின்ற கரும்புத் தோட்டத்திலும் போலீசார் தீவிரமாகச் சோதனை மேற்கொண்டனர்.
இதனிடையே, சந்தேகத்தின் அடிப்படையில் 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள 3 செல்போன் டவர்களில் பதிவான சுமார் 600 அழைப்புகள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஆலம்பூண்டி சிவன் கோயிலில் தங்கியிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சாமியாரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், சிறுமி மாயமாகி 9 நாட்கள் கடந்தும் இதுவரை அவரைப் பற்றிய உறுதியான தகவலோ, முக்கிய தடயமோ கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் சிறுமியின் நிலை என்னவானது என்பது தெரியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர். தங்களது மகளை விரைந்து கண்டுபிடித்து தர வேண்டும் என அவர்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், 9-வது நாளாகவும் தனிப்படை போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் ஆலம்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

