விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமி காணாமல் போன வழக்கு விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்று கை, கால்களை கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்வதாக இளைஞர்கள் குற்றச்சாட்டு.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை எஸ்பியை நேரில் சந்தித்து சிபிசிஐடி போலீசாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் புகார் அளித்ததால் பரபரப்பு.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, வீட்டில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த போது கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி அதிகாலை திடீரென காணாமல் போனார்.
சிறுமி காணாமல் போய் இன்றோடு 47 நாட்களான நிலையில் 37வது நாளாக இன்று சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் தாய், தந்தை, பாட்டி, சகோதரி, உறவினர்கள், அக்கம், பக்கத்து வீட்டினர், கிராம பொதுமக்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் சிறுமியின் வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாய நிலம், செங்கல் சூளை, மலைப்பகுதிகள், வனப்பகுதி, சிறுவாடி காப்புக்காடு உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய், வனத்துறையினர், ஆயுதப்படை காவலர்கள் உதவியுடன் சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையும் நடத்தி வருகின்றனர்.

சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன் ஆகியோர் தலைமையில் 50 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் தனித்தனிக் குழுக்களாக பிரிந்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள செங்கல் சூளையில் இருந்த சாம்பல்களை எடுத்து சல்லடை மூலம் சலித்தெடுத்து தடயவியல் துறை நிபுணர்களால் ஆய்வு நடத்தப்பட்டது.