சென்னையில் இருந்து இங்கிலாந்து செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திடீர் ரத்து: 210 பயணிகள் கடும் அவதி | British Airways flight from Chennai to England suddenly cancelled

1292192.jpg
Spread the love

சென்னை: சென்னையில் இருந்து இங்கிலாந்து செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், அந்த விமானத்தில் பயணிக்கவிருந்த 210 பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

இங்கிலாந்தில் இருந்து புறப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, பின்னர் சென்னையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு இங்கிலாந்து புறப்பட்டுச் செல்லும். அந்தவகையில், நேற்று மாலை சுமார் 240 பயணிகளுடன், இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த விமானம், திடீரென நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று தரை இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஊழியர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு உடனடியாக சரி செய்ய முடியாததால், இங்கிலாந்து – சென்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இருந்து இங்கிலாந்துக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிப்பதற்காக, சுமார் 210 பயணிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, இன்று அதிகாலை 2.30 மணிக்கு முன்னதாகவே வந்து காத்திருந்தனர்.

ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று (வியாழக்கிழமை) ரத்து என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் சிலர் துபாய், தோகா, அபுதாபி வழியாக, இங்கிலாந்துக்கு மாற்று விமானங்களில் புறப்பட்டு சென்றனர். ஆனால், மற்ற பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். பின்னர், அவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். நாளை அதிகாலை இந்த விமானம், சென்னையில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *