சென்னை: குழந்தையை கொலை செய்த அம்மா கைது; காதலன் சிக்கிய பின்னணி – infant murdered her mother arrested in chennai

Spread the love

சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கடந்த 24-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால் அந்தப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் சென்றார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. தனக்கு திருமணமாகாத நிலையில் குழந்தையை மருத்துவமனையில் பெற்றேடுத்தால் சிக்கல் எனக் கருதிய அந்த இளம்பெண் அங்குள்ள கழிவறைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு அங்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதையடுத்து கழிவறைக்குச் சென்ற இளம்பெண், நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் மருத்துவமனை ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மயங்கிய நிலையில் இளம்பெண்ணும் உயிரிழந்த நிலையில் குழந்தையும் அங்கு கிடந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் மருத்துவமனை ஊழியர்கள்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், உயிரிழந்த குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்கம் தெளிந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்ற தகவல் தெரியவந்தது. மேலும் இந்தக் கர்ப்பத்துக்கு சந்தோஷ் என்ற இளைஞர் காரணம் என போலீஸாருக்கு தெரிவந்தது. உடனடியாக அவரைப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸார் கூறுகையில், “பிரேத பரிசோதனையில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதும் குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. அதுதொடர்பாக குழந்தையின் அம்மாவிடம் விசாரித்தோம். அப்போது திருமணமாகாமல் குழந்தையை பெற்றெடுத்தால் சிக்கல் வரும் எனக் கருதி குழந்தையை கழிவறைக்குள் போட முதலில் முயற்சி செய்தபோது காயங்கள் ஏற்பட்டதாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து குழந்தையை கொலை செய்த குற்றத்துக்காக அந்தப் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இதற்கிடையில் குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண், சிறுமியாக இருக்கும்போதே அவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக போக்சோ வழக்கில் சந்தோஷை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்”‘ என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *