International
oi-Velmurugan P
டோக்கியோ: செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான ‘போபோஸ்’ நிலவிலிருந்து தூசி மற்றும் பாறைத் துகள்களைச் சேகரித்து பூமிக்குக் கொண்டு வருவதற்காக ஜப்பானில் இருந்து விண்கலம் ஒன்று விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்திருக்கிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால், செவ்வாய் கிரகம் அல்லது அதன் நிலவுகளில் இருந்து ஆய்வுகளுக்காக பூமிக்கு மாதிரிகள் கொண்டுவரப்படுவது இதுவே முதன்முறை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நம்முடைய சூரியக் குடும்பத்தின் உட்பகுதியில் மூன்றே மூன்று நிலவுகள் மட்டுமே இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஒன்று – நமது பூமிக்கு இருக்கும் நிலவு. மற்ற இரண்டு – செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் போபோஸ் மற்றும் டீமோஸ். இவை இரண்டும் அளவில் மிகச் சிறியவை. போபோஸ் வெறும் 20 கி.மீ விட்டம் கொண்டது; டீமோஸ் 10 கி.மீ மட்டுமே! ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை ஆகும். இவை விண்வெளியில் மிதக்கும் உருளைக்கிழங்குகளைப் போலவே காட்சிளிக்கிறது .

இதனை ஆய்வு செய்ய ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி முகமை ‘செவ்வாய் நிலவுகள் ஆராய்ச்சி’ (MMX) என்ற விண்கலத்தை இன்று ஏவி உள்ளது. இந்த எம்எம்எக்ஸ் விண்கலம் வரும் 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் போபோஸ் நிலவைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாயின் நிலவுகள் எப்படி உருவாயின என்ற நீண்டகால மர்மத்திற்கு இந்த திட்டம் விடை காணப்போகிறது.
இதுகுறித்து ஜப்பானின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஆய்வாளரும், MMX திட்டத்தின் துணை அதிகாரியுமான பேராசிரியை சாரா ரஸ்ஸல் கூறுகையில், “இதுவரை செவ்வாயின் நிலவான போபோஸ் நிலவுக்குச் சென்று அங்கிருந்து மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவந்த எந்தவொரு திட்டமும் வெற்றிபெற்றது கிடையாது. இது மிகவும் சவாலான, அதேசமயம் சுவாரசியமான திட்டம் ஆகும்.
MMX என்ற ஜப்பானின் குட்டி ரோவருக்கு உள்ள சவால்
ஜப்பானின் MMX விண்கலம் முதலில் டீமோஸ் நிலவை ஆய்வு செய்துவிட்டு, பின்னர் போபோஸ் நிலவில் கவனம் செலுத்த போகிறது. அங்கே தரை இறங்கி ஆராய்ச்சி செய்ய ஒரு சிறிய ‘ரோவர்’ வாகனத்தையும் அது இறக்கிவிட இருக்கிறதாம் எம்எம்எஸ் விண்கலம். இது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஏனெனல் இவ்வளவு சிறிய நிலவில் இதுவரை யாரும் ரோவரைத் தரையிறக்கியது கிடையாது. போபோஸ் நிலவுக்கு சொந்தமாக பெரிய அளவில் ஈர்ப்பு விசையும் இல்லை ஆனால், அதன் பக்கத்திலேயே இருக்கும் மிகப்பெரிய செவ்வாய் கிரகம் அதிக ஈர்ப்பு விசையைக் கொண்டிருப்பதால், இந்தச் சிறிய நிலவின் மேற்பரப்பில் ரோவரைத் தரையிறக்குவது பெரும் சவால் .
இந்த சிறிய ரோவர் தரைப்பகுதியை ஆராய்ந்து சரியான இடத்தைத் தேர்வு செய்தவுடன், MMX விண்கலம் போபோஸில் தரையிறங்கும். அங்குள்ள ஒரு ரோபோடிக் கை மற்றும் கருவிகள் மூலம் நிலவின் தூசிகள் சேகரிக்கும். சேகரிக்கப்படும் மாதிரிகள் ஒரு சிறிய காப்ஸ்யூலில் அடைக்கப்பட்டு, 2031-ஆம் ஆண்டில் தெற்கு ஆஸ்திரேலியாவின் வூமரா பாலைவனத்தில் வந்து இறங்கும். பூமிக்குக் கொண்டுவரப்பட உள்ள மாதிரியின் அளவு வெறும் 10 கிராம் மட்டும் தான்” இவ்வாறு கூறினார்.
“இது மிகவும் சிறிய அளவுதான்” என்கிறார் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் க்ரைசா அவ்டெலிடௌ. “இருந்தாலும், அதில் இருக்கும் தனித்தனி துகள்களைக் கூட எங்களால் ஆழமாக ஆராய முடியும். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு கிலோ கணக்கில் பொருட்கள் தேவையில்லை. அதனால், இதில் கொண்டுவரப்படும் ஒவ்வொரு கிராமும் மிகுந்த மதிப்புமிக்கது!” என்று க்ரைசா கூறினார்.
செவ்வாய் நிலவுகளின் ரகசியம்
இந்த மாதிரிகள் மூலமாக, செவ்வாய் நிலவுகளான போபோஸ் மற்றும் டீமோஸின் பிறப்பு பற்றிய இரு வேறு கோட்பாடுகளுக்கு விடை கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். செவ்வாய் கிரகத்தின் ஆரம்ப காலத்தில் ஏதேனும் ஒரு விண்வெளிப் பாறை அதன் மீது மோதி, உடைந்த துகள்களிலிருந்து போபோஸ் மற்றும் டீமோஸ் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேநேரம் விண்வெளியில் சுற்றித் திரிந்த இரு சிறுகோள்களை செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசை தன் வசப்படுத்தி நிலவுகளாக மாற்றியிருக்கலாம் என்றும் கருத்துக்கள் உள்ளன.
இதுபற்றி பேராசிரியை சாரா கூறுகையில், “மாதிரிகள் பூமிக்கு வந்தவுடன் அதன் வேதியியல் மற்றும் கனிமக் கட்டமைப்பை ஆராய்வோம். இந்த இரண்டு கோட்பாடுகளுக்கும் முற்றிலும் வெவ்வேறு முடிவுகள் கிடைக்கும் என்பதால், உண்மை என்னவென்று நமக்கு உடனே தெரியவந்துவிடும்” என்றார். இந்தத் திட்டத்தில் அறிவியலாளர்களுக்கு மற்றொரு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் இருக்க காரணம் இல்லாமல் இல்லை.. ஏனெனில் போபோஸ் நிலவு செவ்வாய் கிரகத்திற்கு மிக அருகில் இருப்பதால், எப்போதெல்லாம் செவ்வாயின் மீது விண்கற்கள் மோதுகிறதோ, அப்போதெல்லாம் அங்கிருந்து எழும்பும் தூசிகள் போபோஸ் நிலவின் மீது போய் படிந்திருக்க வாய்ப்பு இருக்கிறதாம். ஆகவே பூமிக்கு வரும் மாதிரிகளில் செவ்வாய் கிரகத்தின் துகள்களும் கலந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது! இது செவ்வாய் கிரகத்தின் வரலாற்றையும் அதன் அமைப்பையும் நேரடியாக அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பு என்று அறிவியலாளர்கள் மெய்சிலிர்க்கிறார்கள்.
உலக நாடுகளின் கனவு
செவ்வாயிலிருந்து மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவருவது உலகின் பல்வேறு விண்வெளி வீரர்களின் நீண்டகால கனவு. நாசாவின் ‘பெர்செவரன்ஸ்’ (Perseverance) ரோவர் 2021 முதல் செவ்வாயில் ஆய்வு செய்து, மாதிரிகளைச் சேகரித்து குழாய்களில் சேமித்து வைத்திருக்கிறது. ஆனால், அமெரிக்க நாடாளுமன்ற நிதியுதவியை நிறுத்தியதால், அந்த மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் நாசா/இஎஸ்ஏ (NASA/ESA) திட்டம் கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சீனா 2028-இல் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பி, 2031-க்குள் அங்கிருந்து மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்திலிருந்து உடைந்த பாறைத் துண்டுகள் விண்கற்களாக பூமிக்கு வந்து விழுந்ததுண்டு. ஆனால், பூமியின் வளிமண்டலம், காற்று மற்றும் நீருடன் தொடர்பு கொள்வதால் அவை உடனடியாக மாசடைந்து விடுகின்றன. எனவேதான், எவ்வித மாசும் இல்லாத ‘சுத்தமான’ மாதிரிகளை நேரடியாக விண்வெளியில் இருந்து பெற உலக அறிவியலாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அது சாத்தியமானால், செவ்வாயின் ரகசியம் தெரிந்துவிடும்.