சொகுசு வாழ்க்கை வேண்டாம்.. ரூ.15 கோடி தொழிலை விட்டுவிட்டு குடும்பத்துடன் துறவியாகும் தொழிலதிபர்! | Rs.15 Cr annual turnover textile businessman and the whole family embrace jain monkhood

Spread the love

India

oi-Nantha Kumar R

ஜெய்ப்பூர்: ஆண்டுக்கு ஜவுளி தொழில் மூலம் ரூ.15 கோடி சம்பாதித்து வரும் பிரபல தொழிலதிபர் ஒருவர் சொகுசு வாழ்க்கை வேண்டாம் என்று தனது மனைவி, 2 மகள்களுடன் ஜெயின் மதத்தின் அடிப்படையில் துறவறம் செல்வதாக அறிவித்துள்ளார்.

rs-15-cr-annula-turnover-btextile-businessman-and-the-whole-family-embrace-jain-monkhood

ஆண்டுக்கு ரூ.15 கோடிக்கு வருமானம். சொகுசு பங்களா.. தனித்தனியாக 3 ஜவுளிக்கடைகள்.. சாப்பிட நினைக்கும் உணவை உடனடியாக சமைத்தோ அல்லது ஆர்டர் போட்டோ சாப்பிடலாம். வீட்டை சுற்றி நிற்கும் கார், டூவீலர்கள்.

வெளிமாநிலம், வெளிநாடு என்று எங்கு வேண்டுமானாலும் செல்லும் வசதி. ஆனால் இதை எல்லாவற்றையும் விட்டுவிட்டு யாசகம் பெற்று தான் வாழ வேண்டும். பணத்தை கையால் கூட தொடக்கூடாது என்று துறவறத்துக்கு தயாராகி உள்ளார் ஜவுளிக்கடை அதிபர் ஒருவர். அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே உள்ள ஜஸ்வந்தகார்க் கிராமத்தை சேர்ந்தவர் திலீப் பாய் போகர் (வயது 47). இவரது மனைவி பெயர் ஜோதி பென் (45). இந்த தம்பதிக்கு சாவி (22) மற்றும் சார்வி (14) என்ற மகள்கள் உள்ளனர்.

திலீப் பாய் போகர் குஜராத் மாநிலம் சூரத்துக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் ஜவுளிக்கடையை திறந்தார். விற்பனை நன்றாக இருந்தது. இதனால் அடுத்தடுத்து மேலும் 2 கடைகளை திறந்தார்.

ஆண்டுக்கு ரூ.15 கோடி வரை அவருக்கு ஜவுளி தொழிலில் கிடைத்தது. இதனால் அவர் தனது தொழிலை இன்னும் விரிவாக்கம் செய்ய நினைத்தார். இதற்கான பணிகளை அவர் தொடங்கினார். இந்நிலையில் தான் ஜெயின் ஆச்சார்யா (ஜெயின் சமுதாயத்தில் ஆன்மிக தலைவர்) ஒருவரை சந்தித்தார். அவர் மூலம் ஜெயின் மதத்தின் மீது திலீப் பாய் போகர் அதிக ஈடுபாடு கொண்டார்.

அதோடு சொகுசு வாழ்க்கையை கைவிட்டு ஜெயின் மதத்தை பின்பற்றி துறவு வாழ்க்கை வாழ முடிவெடுத்தார். அதன்படி திலீப் பாய் போகர் தனது குடும்பத்துடன் துறவறம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். 2027 ம் ஆண்டு பிப்ரவரி 8 ம் தேதி முதல் அவர் துறவற வாழ்க்கையை மேற்கொள்ள உள்ளார். அன்றைய தினம் தீக்சை பெற உள்ளார்.

திலீப் பாய் போகர் உடன் அன்றைய தினம் அவரது மனைவி ஜோதி பென், மகள்கள் சாவி, சார்வி ஆகியோருடன் துறவறம் மேற்கொள்ள உள்ளனர். இதில் மகள் சாவி பிபிஏ கிராபிக் டிசைன் படிப்பை முடித்தார். இன்னொரு மகள் சார்வி 9 ம் வகுப்பு படித்தார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.

திலீப் பாய் போகர் – ஜோதி பென் ஆகியோரின் இன்னொரு மகள் சைலி ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டில் துறவறம் சென்றார். தற்போது அவர் சாத்வி தர்ஷிதா என்ற பெயரில் துறவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் திலீப் பாய் போகர் இப்போது மனைவி, 2 மகள்களுடன் துறவு வாழ்க்கைக்குள் நுழைய உள்ளார்.

ஜெயின் மதத்தில் ஒருவர் துறவியானால் அவர் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். இதற்கான பயிற்சியில் தற்போது தீபக் பாய் போகர் தனது குடும்பத்துடன் பயிற்சியை தொடங்கி உள்ளார்.

தீபக் பாய் போகர் தேர்வு செய்துள்ள முறையில் ஒருவர் துறவறம் மேற்கொண்டால் முதலில் அவர்களின் தலைமுடி பிடுங்கி அகற்றப்படும். அவர்களின் பெயர்கள் மாற்றப்படும். வெள்ளை உடையில் நகை உள்ளிட்ட எந்த அணிகலன்கள் இன்றி அவர்கள் வாழ தொடங்குவார்கள்.

குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் இருக்காது. எவ்வளவு தொலைவாக இருந்தாலும் கூட அனைத்து இடங்களுக்கும் நடந்தே செல்ல வேண்டும். நிலத்துக்கு கீழ் விளையும் பொருட்களை சாப்பிடக்கூடாது. சூரியன் மறைந்த பிறகு எதையும் சாப்பிடக்கூடாது. தனியாக சமைத்து சாப்பிடக்கூடாது. மற்றவர்களிடம் யாசகம் வாங்கி தான் சாப்பிட வேண்டும்.

எந்தவொரு உயிருக்கும் துன்பம் விளைவிக்க கூடாது. உண்மையை மட்டுமே பேச வேண்டும். வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிய வேண்டும். அடுத்தவர்களின் பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றிற்கு ஆசைப்படக்கூடாது. தாம்பத்திய வாழ்க்கை கூடாது.

தலைமுடி, தாடியை சலூன் கடைகளில் வெட்டவோ, சவரம் செய்யவோ கூடாது. அவர்களாகவே பிடுங்கி கொள்ள வேண்டும். எந்த இடத்திலும் நிரந்தரமாக தங்க கூடாது. இடத்தை மாற்றி கொண்டே இருக்க வேண்டம். பணத்தைத் தொடுவதோ, சேமிப்பதோ கூடாது. மின்சாரம், செல்போன், தொலைக்காட்சி உள்பட பிற நவீன வசதிகளை பயன்படுத்தவே கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *