ஆனால், அந்தப் பேச்சுகளை எல்லாம் கடந்து ஐஸ்வர்யா முன்னேறினார். “நம்ம கையில் ஒரு ரூபாய் இருந்தாலும் அது நம்ம உழைப்பில் கிடைத்ததாக இருக்கணும். என்னுடைய கணவருக்கு உறுதுணையாக அவருக்கு சப்போர்ட்டிவா இருக்கணும். அதற்கு நாமும் சம்பாதித்து சுயமாக நிற்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.” என்கிறார் ஐஸ்வர்யா.
இதற்காக முறையாக பியூட்டிஷியன் கோர்ஸ் கற்றுக்கொண்டு, சுமார் ரூ.2 லட்சம் முதலீட்டில் தொடங்கிய தொழில், இன்று அவருக்கான வருமானத்தை மட்டுமல்ல… இன்னொரு பெண்ணுக்கான வேலைவாய்ப்பையும் உருவாக்கியிருக்கிறது. தன்னுடைய கடையில் தற்போது மற்றொரு பெண்ணுக்கு வேலை கொடுத்து, அவரையும் தொழிலில் வளர்த்துவருகிறார்.
அவருடைய உழைப்பின் பலன் பார்லரின் வருமானத்தில் மட்டுமல்ல, குடும்ப வாழ்க்கையிலும் தெரிகிறது. சுமார் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டியுள்ள புதிய வீட்டின் அடித்தளப் பணிக்காக, தன்னுடைய பியூட்டி பார்லர் மூலம் சேமித்த ரூ.5 லட்சத்தைச் செலவிட்டிருக்கிறார்.
“நான் பியூட்டிஷியனா சம்பாதிச்சு சேமிச்ச பணத்துல எங்க வீட்டோட basement-க்கு ரூ.5 லட்சம் செலவு பண்ணியிருக்கேன். அந்தப் பணம் என் உழைப்புல கிடைச்சது என்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்கிறார் ஐஸ்வர்யா.
குழந்தைகளின் கல்விச் செலவிலும் அவருடைய வருமானம் முக்கியப் பங்கு வகிக்கிறது. “ஒரு semester-க்கு கணவர் fees கட்டுவார். அடுத்த semester-க்கான fees-ஐ நான் என்னுடைய வருமானத்தில் இருந்து கட்டுவேன். அந்த அளவுக்கு இந்தத் தொழில் எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு” என்கிறார்.
இதோடு நிற்காமல், தன்னுடைய அனுபவத்தையும் உழைப்பையும் நம்பி தற்போது புதிதாக Vip beauty parlour என்ற மற்றொரு பியூட்டி பார்லரையும் தொடங்கியிருக்கிறார்.
“ஒண்ணுமே பண்ண முடியலையேன்னு வீட்டுக்குள்ள இருந்த காலம் போய், இன்னைக்கு என்னால இன்னொரு பெண்ணுக்கும் வேலை கொடுக்க முடியுது. என்னுடைய வீட்டுக்கும், பிள்ளைகளுடைய படிப்புக்கும் என்னால பங்களிக்க முடியுது. இதுதான் நான் இந்தத் தொழில்ல சாதிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்” என்கிறார் ஐஸ்வர்யா.
ஒருகாலத்தில் மாதம் ரூ.3,000 கிடைத்தால் போதும் என்று நினைத்தவர்… இன்று ஒரு நாளில் அதே ரூ.3,000 வரை சம்பாதிக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்.
வருமானம் உயர்ந்தது மட்டுமல்ல… தன் உழைப்பால் வீட்டைக் கட்டி, பிள்ளைகளின் படிப்பைத் தாங்கி, இன்னொரு பெண்ணுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு தன்னுடைய வாழ்க்கையையும் மாற்றியிருக்கிறார் ஐஸ்வர்யா.