ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசுப் பதவி.. எந்த தவறும் இல்லை.. செங்கோட்டையன் சொன்ன விளக்கம்! | Minister Sengottaiyan Defends ‘Jananayagan’ Producer Venkat Narayana’s Appointment as Delhi Special Representative

Spread the love

Tamilnadu

oi-Yogeshwaran Moorthi

ஈரோடு: டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டதில் தவறில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வெங்கட் நாராயணா உட்பட முதல்வர் விஜய்யால் நியமிக்கப்பட்ட அத்தனை பேரும் தமிழ்நாட்டிற்காக குரல் கொடுப்பார்கள் என்று கூறிய செங்கோட்டையன், காவிரி நதி பிரச்சனையிலும் தமிழ்நாட்டிற்காக குரல் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான கே.வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Sengottaiyan

கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான வெங்கட் நாராயணா, பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு முக்கியத் தொழிலதிபர் ஆவார். எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவான விஜய்யின் இறுதிப் படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

விஜய் ஆட்சி அமைப்பதற்காக ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து உரிமை கோரியபோது, அவருடன் வெங்கட் நாராயணாவும் உடனிருந்தார். டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பது கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான ஒரு முக்கியப் பொறுப்பாகும். மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சர்களுடன் தமிழக அரசுக்கான தொடர்பை வலுப்படுத்துவது, விஜய் டெல்லி செல்லும்போது அவரது முக்கியப் பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடக் கூடிய முக்கிய நபர்.

அதுமட்டுமல்லாமல் தமிழகத்திற்குச் சேர வேண்டிய மத்திய அரசின் நிதி மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் பெறச் செயலாற்றுவது, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது தமிழக எம்பிக்களுக்குத் தேவையான அதிகாரப்பூர்வத் தகவல்களை வழங்குவது ஆகிய பணிகளும் டெல்லி சிறப்பு பிரதிநிதியின் பொறுப்புதான்.

கர்நாடகாவைச் சேர்ந்தவருக்கு இந்த பொறுப்பை வழங்கியது எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. திமுக, அதிமுக, அமமுக, தேமுதிக, நாதக உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து வெங்கட் நாராயணா நியமனம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

செங்கோட்டையன் பேசுகையில், டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டதில் தவறில்லை. சிறப்பு பிரதிநிதிகளை நியமிப்பது அரசின் கொள்கை முடிவு. வெங்கட் நாராயணா உட்பட முதல்வர் விஜய்யால் நியமிக்கப்பட்ட அத்தனை பேரும் தமிழ்நாட்டிற்காக குரல் கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *