பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணியையும், பின்புலத்தில் உடந்தையாக இருந்த குற்றவாளிகளையும் கண்டறிந்து, விசாரணையையும், வழக்கையும் துரிதமாக நடத்தி, மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சமூகத்தில் தொழிலதிபராக அறியப்பட்ட ஜெம் வீரமணி நிகழ்த்திய பாலியல் குற்றங்களும், அதுதொடர்பாக அடுத்தடுத்து வரும் செய்திகளும் பேரதிர்ச்சி தருகின்றன. உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் போல, பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்ட கோரப் பாலியல் வன்முறைகள் தமிழ்நாட்டையே உறைய வைத்திருக்கின்றன. பெரும் அதிர்வை நாடெங்கிலும் ஏற்படுத்தியிருக்கின்றன.
கல்விக்கு உதவி செய்வதாகக் கூறி, விளிம்பு நிலையிலிருக்கும் பெண் பிள்ளைகளைக் குறிவைத்து, நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்திருக்கிறது.
முந்தைய திமுகவின் ஆட்சியிலேயே ஜெம் வீரமணி மீது ஆதாரத்தோடு புகார் அளிக்கப்பட்டபோதிலும் வழக்கு மட்டும் தொடுத்துவிட்டு, கைதுசெய்யாதுவிட்டதும், போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி, நீதிமன்றத்தில் காவல்துறை கையைவிரித்து, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைந்ததும் கடும் கண்டனத்திற்குரியது.