1812 -ஆம் ஆண்டு
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் ஒரு தேர்தல் தொகுதி, பல்லி போன்ற “சாலமண்டர்’ (Salamander) உயிரினத்தின் தோற்றத்தில் விசித்திரமாக வளைத்து வரையப்பட்டது. ஒரு உள்ளூர் செய்தித்தாள் அந்த வரைபடத்தை இறக்கைகள் கொண்ட ஒரு அரக்கனாக சித்தரித்தது. மேலும், அந்த சட்டத்தில் கையெழுத்திட்ட ஆளுநர் எல்பிரிட்ஜ் ஜெர்ரியின் பெயருடன் ‘சாலமண்டர்’ என்ற வார்த்தையை இணைத்து, அதற்கு ‘ஜெர்ரிமாண்டர்’ (Gerrymander) என்று பெயரிட்டது.
இந்த வார்த்தை, காலப்போக்கில் பல கடல்களைத் தாண்டி, இன்று 2026-ல் இந்தியாவின் தொகுதி மறுவரையறை விவாதத்தின் மையப் புள்ளியாக மாறியுள்ளது.
‘ஜெர்ரிமாண்டரிங்’ என்பது, வாக்காளர்களின் பிரதிநிதித்துவத்தை நேர்மையாக உறுதி செய்வதற்காக அல்ல, மாறாக யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானிப்பதற்காக தேர்தல் எல்லைகளை வரைவதைக் குறிக்கிறது.
தற்போது இந்தியாவில் நரேந்திர மோடி அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பயிற்சி குறித்தும் இதேபோன்ற அச்சம்தான் தற்போது எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.
எந்தவொரு தொகுதி மறுவரையறை முறையும் இரண்டு முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்…
1. ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை இடங்கள் கிடைக்கும்?
2. ஒவ்வொரு தொகுதியின் எல்லைகள் என்னவாக இருக்கும்?
நரேந்திர மோடி அரசு திங்களன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கும் மசோதாக்கள், முதல் கேள்விக்குத் தீர்வு காண்கின்றன. அதன்படி, தற்போதைய விகிதாச்சாரத்தை மாற்றாமல், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரே சீராக 50 சதவீத இடங்கள் அதிகரிக்கப்படும்.
ஆனால், தொகுதிகளின் எல்லைகள் குறித்த இரண்டாவது கேள்விதான், தற்போது எதிர்க்கட்சிகளின் போராட்டக் களமாக மாறியுள்ளது.