டிரைவராக கணவர், கண்டக்டராக மனைவி, பயணிகளாக குழந்தைகள்; வறுமையில் போராடும் கேரளக் குடும்பம்

Spread the love

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கடக்கல்லைச் சேர்ந்தவர் மனு. இவர் கடந்த 23 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டில் டாரஸ் லாரி ஓட்டுநராக இருந்தபோது, தீபிகா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும், தீபிகாவின் குடும்பத்தினர் இன்றளவும் இவர்களுடன் பிணக்கத்திலேயே உள்ளனர். தற்போது அல் அர்ஜுன் என்ற தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக உள்ளார் மனு. மனுவின் தாயார் கோமளகுமாரி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இவரது தந்தை பாலச்சந்திரன் பிள்ளை ஆயூரில் வசித்து வருகிறார்.

இதற்கிடையில், மனு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டார். குடும்பச் செலவுக்கே வழியின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளான நிலையில், கணவருக்குத் துணையாக ஓராண்டுக்கு முன்பு தீபிகாவும் அதே ‘அல் அர்ஜுன்’ பேருந்தில் கண்டக்டராகப் பணியில் சேர்ந்தார். மனுவின் வீட்டில் நோய்வாய்ப்பட்ட தந்தையால் இவர்களுக்கு உதவ முடியாத நிலை.

தீபிகாவின் பெற்றோரும் இவர்களைக் கண்டுகொள்வதில்லை. மனுவும், தீபிகாவும் பேருந்தில் வேலைக்குச் சென்றுவிடுவதால் விடுமுறை நாட்களில் குழந்தைகளைக் கவனிக்க ஆள் இல்லாத நிலை. எனவே, பள்ளி விடுமுறை நாள்களில் குழந்தைகளையும் தங்களுடன் பேருந்தில் அழைத்துச் செல்கின்றனர் இந்தத் தம்பதியினர்.

மாதிரி படம்
பேருந்து நிலையம்

இதுகுறித்து தீபிகா கூறுகையில், “என் காதல் திருமணத்திற்குப் பிறகு என் வீட்டார் எங்களுடன் பேசுவதில்லை. மனுவின் அம்மாவும் இறந்துவிட்டார். அப்பாவும் உடல்நலக் குறைவால் ஆயூரில் இருக்கிறார். இதற்கிடையில் மனுவுக்குக் கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்பட்டதால், குடும்பச் செலவுக்கே மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழல் உருவானது.

கணவருக்குத் தோள் கொடுக்கவும், குடும்பத்தைக் காப்பாற்றவும் வேறு வழியின்றி ஓராண்டுக்கு முன்பு நானும் இதே பேருந்தில் கண்டக்டராகப் பணியில் சேர்ந்தேன். விடுமுறை நாள்களில் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், குழந்தைகளை எங்களுடனேயே பேருந்தில் அழைத்துச் செல்கிறோம்.

வீட்டிலிருந்து கிளம்பும்போதே மூன்றாம் வகுப்பு படிக்கும் விநாயக்கும், இரண்டாம் வகுப்பு படிக்கும் வைஷ்ணவியும் தங்களின் பாடப் புத்தகங்களையும் மறக்காமல் எடுத்துக்கொண்டு எங்களுடன் வந்துவிடுவார்கள்.

பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போது கூட்டம் குறையும் நேரங்களில் இருக்கையில் அமர்ந்து படிப்பதும், பேருந்து நிலையங்களில் வண்டி நிறுத்தப்படும்போது வீட்டுப்பாடங்களை எழுதுவதுமாக அவர்களின் விடுமுறை நாட்கள் கழிகின்றன.

பேருந்தில் பயணிக்கும் மனு, தீபிகா மற்றும் குழந்தைகள்
பேருந்தில் பயணிக்கும் மனு, தீபிகா மற்றும் குழந்தைகள்

மகன் விநாயக்கிற்கு ஆஸ்துமா பாதிப்பும் இருப்பதால், எங்கள் கண்முன்னே இருப்பதுதான் எங்களுக்குப் பாதுகாப்பு. கணவர் மனு, மகன் விநாயக் ஆகிய இருவரின் மருத்துவச் சிகிச்சைக்காகவும் மாதந்தோறும் பெரிய தொகை செலவாகிறது.

கடக்கல்லில் இருக்கும் இவர்களின் பூர்வீக வீட்டின் ஒரு பகுதி, கடந்த மழையின்போது மரம் விழுந்து சேதமடைந்தது. இதனால், தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். அரசின் ‘லைஃப்’ வீட்டுவசதித் திட்டத்தில் விண்ணப்பித்துவிட்டு, காத்திருக்கிறோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *