"டீசல் தொழிற்சாலைகளை ரஷ்யா இழந்துவிட்டது; இது அவமானம்" – உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப்

Spread the love

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கிறது அமெரிக்கா.

இந்தப் போரை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை, தடைகள், சட்டங்கள் எனக் கடுமையாக முயன்று வருகிறார்.

ட்ரம்ப் பதிவு

இந்தச் சமயத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவின் தற்போதைய நிலை என்று தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…

“உக்ரைன் உடனான போரின் காரணமாக, துரதிர்ஷ்டவசமாக ரஷ்யா தனது டீசல் தொழிற்சாலையின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

ரஷ்யாவில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான டீசல் சுத்திகரிப்பு ஆலைகள் தகர்க்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் இவை தற்காலிகமாகச் செயல்படாது.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

உக்ரைன் உடனான முட்டாள் தனமான, முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் இந்தப் போர் முடிய வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 25,000 பேர் கொல்லப்படுவது உலகத்திற்கே வேதனையாக இருக்கிறது. இது என்னவொரு அவமானம்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெலன்ஸ்கி என்ன சொல்கிறார்?

இந்தப் பதிவைக் குறிப்பிட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், “உக்ரைனுக்கும் காமன் சென்ஸுக்கும் எதிராக ரஷ்யா தொடுத்துள்ள இந்தப் போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

இந்தப் போர் தொடங்கிய முதல் ஆண்டிலிருந்தே, இதன் விளைவுகள் மிகவும் கொடூரமானதாக இருந்து வந்துள்ளன.

எண்ணற்ற உயிர்களின் இழப்பு, நகரங்கள் மற்றும் கிராமங்களின் அழிவு, உணவுப் பாதுகாப்புச் சிக்கல்கள், எரிசக்தி நெருக்கடிகள்,

தானியங்கி ட்ரோன்கள் உட்பட முன்னெப்போதும் கண்டிராத வகையில் தொழில்நுட்பம் மற்றும் தாக்குதல் திறன்களின் அசுர வளர்ச்சி எனப் பல பாதிப்புகள்.

இந்தப் போரின் முதல் நிமிடத்திலிருந்தே உக்ரைன் அமைதியைத்தான் விரும்புகிறது.

கண்ணியமான முறையில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், ரஷ்யாவின் புதிய படையெடுப்புகளைத் தடுப்பதற்கும் நாங்கள் ஏற்கனவே பல ராஜதந்திர முன்மொழிவுகளைக் கூறிவிட்டோம்.

தற்போது அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவுடன் ஒரு நல்ல பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கடுமையான போர் தீவிரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளுடன், அமைதியை மேலும் அருகில் கொண்டுவருவதற்கான யோசனைகளும் தற்போது முன்னிலையில் உள்ளன.

தாக்குதலுக்கு உள்ளாகும் நாடு மட்டுமே இனி பாதிப்பைச் சந்திக்கும் என்ற நிலை மாறப்போகிறது.

தாக்குதல் நடத்தும் ஆக்கிரமிப்பாளரும் பாதிப்பை அனுபவிக்கும் வகையில்தான் போரின் தற்போதைய தன்மை மாறியிருக்கிறது. தொழில்நுட்பம் அதைச் சாத்தியமாக்குகிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *