அணை கட்டப்பட்ட காலத்தில் வாழ்ந்த, இன்றும் சாட்சிகளாக உள்ள சிலரை நேர்காணல் செய்த போது கிடைத்த விவரங்களை காண்போமா?
பொன்னுசாமி – புதுவேல மங்கலம்.
பொன்னுசாமி சிறுவனாக இருந்தபோது பால், தயிர் விற்க கூடையில் எடுத்துக் கொண்டு, காவிரி கரை ஓரமாக சென்று மேட்டூர் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு விற்பனை செய்து வந்த பால்காரர். இன்றைய வயது 96. “அணை கட்டி முடித்த பிறகு காந்தி வெள்ளைக்காரனை ஊரை விட்டு துரத்துனது எனக்கு ஞாபகம் இருக்குது” என்றுதான் தன் உரையாடலை நம்மோடு துவக்கினார்.
“டேம் கட்டும்போது நான் சின்ன பையன். எங்க ஐயா, அம்மா சொல்லி அப்ப நடந்தது ஞாபகம் இருக்கு, தம்பி! நெனவுல உள்ளது சொல்றேன். மேட்டூருல, பங்களாவிலே இருந்த வெள்ளைக்காரங்களுக்கு நான் பால், தயிர் ஊத்தி இருக்கேன். எங்க அம்மா, அம்மாவ பெத்த அம்மா எல்லாம் “கேசம ரெட்டியூர்” என்கிற கிராமத்தில இருந்தோம். காவிரி ஆத்தோர கிராமம். தின்னப்பட்டி, வேலமங்கலம், தாளவாடி, கோட்டையூர், காவேரிபுரம், வன்னி மரத்தூர், கீரைக்காரனூர், ரெட்ட குண்டு, மூலக்காடு இதெல்லாம் ஆத்துக்கு வலப்பக்கம் இருந்த ஊருங்க! இதெல்லாம் டேம் கட்டினதுக்கு அப்புறம் தண்ணீரிலே மூழ்கிடிச்சி.”
“அங்கிருந்து கிளம்பி மூட்டை முடிச்சோட மேட்டாங்காடு பக்கம் நகர்ந்து மேலே வந்துட்டோம். தண்ணி கொஞ்சம் கொஞ்சமாக உசரம் ஏறும் போது எங்க வீடு முழுகிப் போக, பக்கத்தில இருந்த “ஓனான் கரடு” மேல ஏறி இருக்க கொஞ்சம் முயற்சி பண்ணினோம். அங்கேயும் தண்ணி வந்துடுச்சு. இன்னும் மேலே ஏறி மேட்டாங்காடா இருந்த இங்க வந்துட்டோம்” என்றார்.

அந்த இடத்தின் பெயர் “புதுவேல மங்கலம்”. அங்கு இந்த வயதிலும் தனியாக வசிக்கிறார். “எங்களுக்கெல்லாம் கவர்மெண்ட்ல காசு எதுவும் கொடுக்கல. இங்கு நான் தனியா இருக்கேன். இப்ப வயசானவங்களுக்கு பென்ஷன் கொடுக்கிறதா சொல்றாங்க! எனக்கு இன்னமும் வரலீங்க. 96 வயசு ஆகுது. நான் தனியா என்ன பண்ணுவேன்” என்று புலம்பினார்.
“பல வருசம் முன்னாடி, பொண்டாட்டி கண்ணாடி விரியன் பாம்பு கடிச்சு செத்துப் போயிட்டா! நிறைய செலவு பண்ணி காப்பாத்த முடியல” என்று கண்கலங்கினார் பொன்னுசாமி. மூணு பசங்க, ரெண்டு பெண். சம்பாதித்து வைத்த காசில் வாங்கின காட்டை எல்லோருக்கும் எழுதிக் கொடுத்துட்டேன். இப்ப யாரும் கவனிக்கறது இல்ல. கொளத்தூர் மளிகை கடைக்காரர் ராஜேந்திரன் அய்யா, அப்பப்ப அரிசி கொடுப்பார். பொய் பேச மாட்டேன். திருட மாட்டேன்.”
“அந்த காலத்துல, காவிரி ஆத்தோட பரிசல்ல போய் இறங்கி அப்புறம் மேட்டூர் ஊருக்குள்ள நடந்து போய் தயிர் வித்துட்டு வருவேன். என்கூட வருதாயி, பாப்பா, சின்னப்பொன்னு, காயிதங்காடு முத்தாயி, சேத்துக்குழி பாவாயி, உப்பம்பருத்திக்காடு அளவாயி இவர்களெல்லாம் சேர்ந்து போயி ஊருக்குள்ள பால், தயிரு விப்போம்” என்று பழைய நினைவுகளில் மூழ்கினார்.