வொர்க் அவுட் ஆகுமா?
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறிக்கொண்டே போகிறதே என்று கவலைப்படும் சாமானிய மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எத்தனால் மற்றும் தண்ணீர்க் கலவையில் இயங்கும் ஒரு புதிய வகை ஸ்டவ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நாக்பூரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த புதிய தொழில்நுட்பம் வர்த்தக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களை விட மிக மலிவானது மட்டுமல்லாமல், புகையில்லா சமையலுக்கும் வழிவகுக்கும் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்.
சரி, இந்த புதிய கிச்சன் டெக்னாலஜி உண்மையிலேயே வொர்க் அவுட் ஆகுமா? வாங்க பார்க்கலாம்.

இந்த ஸ்டவ் எப்படி வேலை செய்கிறது என்று கேட்கிறீர்களா? இதன் டெக்னாலஜி ரொம்பவே சிம்பிள். எத்தனாலை தண்ணீருடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து, அதன் மூலம் சமையலுக்குத் தேவையான நெருப்பை உருவாக்க முடியும் என்கிறார் கட்கரி.
இது முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் என்பதால், எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பாரம்பரிய எரிபொருட்களுக்கு ஒரு சூப்பரான மாற்றாக இது அமையும் என்பது அவரது நம்பிக்கை. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க இந்தியா தீவிரமாக முயற்சித்து வரும் இந்த நேரத்தில், கட்கரியின் இந்த அறிவிப்பு ஒரு புதிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது
எத்தனாலின் புதிய அவதாரம்!
இந்தியாவின் எத்தனால் கதை என்பது புதிதல்ல. கடந்த பத்தாண்டுகளில் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014-ல் வெறும் 1.5% ஆக இருந்த எத்தனால் கலப்பு, 2025-ல் கிட்டத்தட்ட 20% ஐ தொடும் அளவுக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயன்பட்டு வந்த எத்தனால், இப்போது முதன்முறையாக சமையலறைக்குள் நுழையப் பார்க்கிறது.

இந்த எத்தனால் – தண்ணீர் ஸ்டவ் தொழில்நுட்பம், எல்பிஜி சிலிண்டரை விட மலிவானது மட்டுமல்ல, இது ஒரு முழுமையான “மேட் இன் இந்தியா’ தயாரிப்பு என்பதுதான் இதில் ஹைலைட். இந்தியா தனது எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 87%-ஐ இறக்குமதி செய்வதாகவும், இதற்காக ஆண்டுக்கு பல லட்சம் கோடிகளை செலவிடுவதாகவும் நிதின் கட்கரி பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சூழலில், எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பது இறக்குமதி சுமையைக் குறைப்பதோடு, மாசுபாட்டையும் கட்டுப்படுத்த உதவும் என்பது அரசின் கணக்கு.