இது குறித்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் பாரதியிடம் பேசினோம். அவர், “சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்குக் கழிப்பறை வசதிகள் கூட இல்லாத அவலம் நீடிக்கிறது. கடுமையான வெயில் காரணமாக அண்மையில் ஞானகுமார், பார்த்திபன் உட்பட மூன்று தொழிலாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
வெயில் காலத்தில் போடுவதற்கு ஏதுவாக தடிமனான யூனிஃபார்ம்களை மாற்ற வேண்டும், வாரத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும், மாஸ்க் மற்றும் கிளவுஸ் வழங்க வேண்டும் போன்ற எளிய கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அரசு தயாராக இல்லை.
மாறாக, மூன்று மண்டலங்களில் குப்பை தேங்குவதாகச் செய்திகளைப் கசியவிட்டு, பழிவாங்கும் நோக்கில் அந்த மண்டலங்களையும் தனியாருக்கு மாற்ற அதிகாரிகள் மட்டத்தில்திட்டமிட்டு, தொழிலாளர்களை அரசு பயமுறுத்துகிறது.
ஆட்சிக்கு வந்தால் தங்களுக்குப் பணி நிரந்தரம் கிடைக்கும் என நம்பிய தூய்மைப் பணியாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடந்த ஆட்சியிலாவது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனியார்மயப்படுத்துவது குறித்து ஆலோசித்தார்கள். இந்த அரசு வந்த 40 நாளிலேயே முடிவெடுத்திருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் கூட அவர்களுக்கு முழுதாக சென்று சேர்வதில்லை.