சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி ஏமாற்றியதாக தனியார் பள்ளி சங்கத் தலைவர் பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளரான இளங்கோவன், சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் தனக்கு இருக்கும் அரசியல் மற்றும் அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி, தனியார் பள்ளிகளுக்குத் தேவையான நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்த்துதல், டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாகக் கூறியிருக்கிறார்.