“நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாரு’ என்ற டைட்டில் சாங் மூலம் ஓட்டுகளை அள்ளி சந்தித்த முதல் தேர்தலிலேயே முதல்வராகி விட்டார் ஜோசப் விஜய்.
தேர்தலுக்கு வரும் போதும் சரி, தேர்தலில் வென்ற பிறகும் சரி தவெகவின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சியினர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மீட்டிங்கிலும் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பு என்பது ஆரம்ப காலத்திலிருந்து ரசிகர் மன்றத்தில் பாடுபட்ட ரசிகர்கள்தான். எனவே அவர்களுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் இருக்கும்’ என்பனதான்.
ஆனால் கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகு அப்படி நடக்கிறதா என்றால் பாதிப்பேர் உதட்டைப் பிதுக்கிறார்கள்.
திருவில்லிபுத்தூரில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்று சொல்லலாம்.
விபரம் தெரிந்த நாள் முதல் விஜய் ரசிகராக போஸ்டர் ஒட்டி வந்த ஒருவர் தவெக ஆட்சி அதிகாரத்திலிருக்கும் இந்த நேரத்தில் தனித்து விடப்பட்டிருக்கிறார்.
பதவி, பொறுப்பு ஏதுமின்றி தன்னந்தனி ஆளாக நிற்கும் அவரை நட்பு வட்டம், ஏன் சொந்தக் குடும்பத்தினரே ஏளனமாகப் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக திருவில்லிபுத்தூர் தவெக வட்டாரத்தில் பேசினோம்.
”விருதுநகர் வடமேற்கு மாவட்டச் செயலாளரா இருந்தவர் மாரி செல்வம். சிவகாசி, திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியதுதான் விருதுநகர் வடமேற்கு மாவட்டம்.
இவற்றில் தேர்தலின்போது சிவகாசியைக் கேட்டு வாங்கி விட்டார் கீர்த்தனா. திருவில்லிபுத்தூர் தொகுதி தனித்தொகுதி என்பதால் மாரிசெல்வத்தால் போட்டியிட முடியாத சூழல்.
எனவே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இயலாத சூழல். அப்போதே மாரி செல்வத்தின் குடும்பத்தினர், இவ்வளவு நாள் உழைத்ததற்குப் பலன் இதுதானா எனப் புழுக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.