“தமிழகத்தை தாண்டினால் விஜய் யாருன்னே தெரியாது..” முதல்வரை சரமாரியாக விளாசிய எல்.கே.சுதீஷ் | No one know Vijay apart from tamil nadu, DMDK MP L K Sudhish fresh attack on Chief minister

Spread the love

Tamilnadu

oi-Vigneshkumar

வேலூர்: முதல்வர் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்த மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே சுதீஷ், மேட்டூர் அணைக்கு நீர் திறக்க சென்ற முதல்வரை வரவேற்க அரசு பணத்தை அதிக அளவில் செலவழித்து கண்டிக்கத்தக்கது என சாடினார். மேலும், தமிழ்நாட்டை தாண்டினால் விஜய்யை யாருக்குமே தெரியாது என்று விமர்சித்த அவர், பிரதமருக்கான ரேஸில் மோடியும் ராகுல் காந்தியும் மட்டுமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வேலூரில் தேமுதிகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே சுதீஷ் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸை நேரில் சந்தித்து தனது தொகுதி நிதியை எந்த பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

DMDK L K Sudhish Vijay

தொகுதி மேம்பாடு

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எல் கே சுதீஷ், “தொகுதி மேம்பாட்டு நிதி 5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.. அதை வைத்து எனது சொந்த மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் தொகுதி மேம்பாட்டிற்கு பயன்படுத்த உள்ளேன். இந்த ஐந்து கோடி ரூபாயை வைத்து குடிநீர், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்வது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்தேன். வேலூர் மாவட்டத்தில் தேவையான அடிப்படை வசதிகளை அடுத்த ஆண்டும் நிறைவேற்றுவேன்.. இதற்காக நான் தொகுதி மேம்பாட்டு நிதியை நிச்சயம் தருவேன்.

வேலூர் ஏர்போர்ட்

வேலூர் விமான நிலையம் செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். விமான நிலையத்திற்காக மேலும் 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. தமிழக முதல்வரை சந்தித்து இதை கோரிக்கையாக வைக்க நேரம் கேட்டுள்ளேன். குப்பம் சர்வதேச விமான நிலையத்தை காரணம் காட்டி வேலூர் விமான நிலையம் கைவிடக் கூடாது. வேலூர் மாவட்டத்திற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க முயற்சி எடுப்பேன்” என்றார்.

கடும் தாக்கு

தொடர்ந்து தவெக அரசை விமர்சித்து பேசிய எல் கே சுதீஷ், “தமிழக முதல்வர் மேட்டூர் அணை திறப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அவர் செல்லும் சாலை முழுக்க வரவேற்புக்காக தடுப்புகள் அமைத்து. மக்கள் வரி பணத்தை வீணடித்து இருந்தார்கள். அது கண்டிக்கத்தக்கது.. மேலும், அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளனர். ஆனால் நான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன்.

தமிழக அரசு இன்று டாஸ்மாக் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளித்துள்ளதை பாராட்டுகிறோம். ஊழியர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதால் வரவேற்கிறேன். தமிழகத்தில் தவெக வெற்றி என்பது யாரும் எதிர்பார்க்காதது. இ.வி.எம் மேஷினில் மோசடி இருக்கலாம் எனக்கும் சந்தேகம் உள்ளது.

விஜய்யை தெரியாது

பிரதமர் வேட்பாளர் தேர்வில் மோடியும் ராகுலும் தான் உள்ளனர். தமிழ்நாட்டை தாண்டி வேறு மாநிலங்களுக்கு போனால் விஜய் யார் என்பதே மக்களுக்கு தெரியாது. எனவே பிரதமர் வேட்பாளர் பட்டியலில் விஜய் இருக்கவே வாய்ப்பில்லை. தமிழக வெற்றி கழகத்தின் இந்த ஆட்சி ஜஸ்ட் பாஸ் தான். சட்டமன்றத்தில் நூறு நாட்கள் கடந்த பின்னரும் அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளிக்காமல் மூன்று அமைச்சர்கள் மட்டுமே பதில் அளிக்கின்றனர். வரும் காலங்களில் எல்லா துறை அமைச்சர்களும் பதில் அளிக்க வேண்டும். இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *