தமிழக ஊரக வளர்ச்சித் துறை வங்கிக் கணக்குகளில் ரூ. 22 கோடியை கொள்ளையடித்த சைபர் க்ரைம் கும்பல் – Rs 22 crores digital fraud in rural-development accounts

Spread the love

மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு பணியாக ஊரக பகுதிகளில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார நல மைய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பண பரிவர்த்தனைகளுக்காக, ஊரக வளர்ச்சித்துறையில் மாநில அளவிலான ஒற்றை மையக்கணக்கு பராமரிக்கப்படுகிறது. இங்கிருந்துதான் ஒப்பந்தகாரர்களுக்கு பணம் வழங்கப்படும். இந்நிலையில், இந்த வங்கி கணக்குகளை ஹேக் செய்த சைபர் க்ரைம் கும்பல், மூன்று ஊராட்சிகளிலிருந்து 22 கோடி ரூபாயை மோசடி செய்து அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி துறை சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில்,

“தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி இணைந்து பரிவர்த்தனைகளுக்காக போர்டல் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த போர்டல் ஊரக வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் உள்ளது. ஒவ்வொரு அதிகாரிக்கும் நிதி பரிவர்த்தனை செய்வதற்காக லாகின் மற்றும் பார்ஸ்வேர்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போர்டலுக்கு நுழைந்து சைபர் க்ரைம் மோசடி நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இ- மெயில் மூலமாக லிங்குகளை அனுப்பி போர்டலை ஹேக் செய்து இந்த மோசடியில் சைபர் க்ரைம் கும்பல் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் கடந்த மாதம் 14-ம் தேதியிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குகளின் விவரங்களை சேகரித்து வருகிறோம். சைகர் க்ரைம் கும்பல் பயன்படுத்திய ஐபி அட்ரஸ்களை ஆய்வு செய்தபோது அமெரிக்கா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இந்த மோசடி நடந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்”‘ என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *