புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்று அரசுகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
ஆனால் புதுச்சேரியில் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 13-ம் தேதிதான் முதல்வருடன் இரண்டு அமைச்சர்கள் பதவியேற்றனர். அதற்குப் பிறகு 15 நாள்கள் கழித்துதான் மீதமிருந்த மூன்று அமைச்சர்கள் பதவியேற்றனர்.
முழுமையான அமைச்சரவை அமைந்துவிட்ட பிறகும், அவர்களுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. அதேபோல சபாநாயகர் தேர்தலையும் இன்னும் நடத்தவில்லை. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிற மாநில முதல்வர்கள்கூட சம்பிரதாயத்துக்காக பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துவிட்டனர்.

ஆனால் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட யாரையும் இதுவரை சந்திக்கவில்லை. அதேபோல மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியையும், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவையும் பலவீனப்படுத்தும் பா.ஜ.க-வால், புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியை ஒன்றும் செய்ய முடியவில்லை.
பா.ஜ.க அவரைப் பார்த்து பயப்படுகிறது. பிரதமர் மோடிக்கு ரங்கசாமி சவால் விடுக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில் முதலமைச்சர் ரங்கசாமி பா.ஜ.க-வின் அடிமையாகச் செயல்பட்டார் என்று விமர்சனம் செய்திருந்தேன். இப்போது, `இந்தமுறை என்னிடம் 11 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். பா.ஜ.க-வுக்கு நான் அடிமையில்லை’ என்ற ரீதியில்தான் முதலமைச்சர் ரங்கசாமியின் செயல்பாடுகள் இருக்கின்றன.