‘தமிழன்’ ஷூட்டிங்கில் இயக்குநரிடம் விஜய் சார் சொன்ன விஷயம் மறக்க முடியாதது- நெகிழும் எம்.எஸ்.பாஸ்கர் | actor m.s.bhaskar shares his experience about vijay combination incidents exclusively

Spread the love

முதலமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற எம்.எஸ்.பாஸ்கர், விஜய்யுடன் “திருப்பாச்சி’, ‘சிவகாசி’ உள்பட பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். நேற்று நடந்த இந்தச் சந்திப்பு குறித்து எம்.எஸ்.பாஸ்கரிடம் பேசினால்… நெகிழ்கிறார் மனிதர்.

எம்.எஸ்.பாஸ்கர்

எம்.எஸ்.பாஸ்கர்

“ அவரோடு (விஜய்) பல படங்கள்ல சேர்ந்து நடிச்சிருக்கேன். அதனால மரியாதை நிமித்தமாகச் சந்திச்சேன். அவங்க அம்மாவை (ஷோபா சந்திரசேகர்) நான் ‘அக்கா..’ என்றும்.. அப்பாவை (எஸ்.ஏ.சந்திரசேகர்)’மாமா..’ என்றும்தான் அன்போடு கூப்பிடுவேன். ‘சட்டம் ஒரு இருட்டறை’யில் இருந்து ஏஸ்.ஏ.சி.சாரோட பல படங்கள்ல டப்பிங் பேசியிருக்கேன். அதன் பிறகு தம்பி விஜய், ஹீரோவான பிறகுதான் சந்திக்கறேன். மஜீத் இயக்கிய ‘தமிழன்’ படத்துல நான் கன்டெக்டர். அதோட படப்பிடிப்பு ஃபிலிம் சிட்டியில் நடந்தபோது, விஜய்யைச் சந்திச்சேன். அங்கே பஸ் ஸ்டாப் செட் போட்டிருந்தாங்க. அதில் ஒரு இடத்தின் ஓரத்துல அமைதியாக உட்கார்ந்து படப்பிடிப்புகளை கவனிச்சிட்டிருந்தார். நான் அவர்கிட்ட பேசினேன். என்னை எளிதாக அடையாளம் கண்டுக்கிட்டிருக்கார். அந்தப் படத்தில் நீளமான வசனம் பேசியிருப்பேன், அது அவருக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. இயக்குநர் மஜித்கிட்டேயும், `படத்துல நான் பேசின வசனங்கள் நல்லா இருக்கு. அதுல இருந்து ஒரு பிட்கூட வெட்டிட வேண்டாம். எல்லா டயலாக்குமே இருக்கட்டும்’னு சொல்லியிருக்கார்னு தெரிஞ்சது, ரொம்ப நெகிழ்ந்துடேன். அதன் பிறகு பேரரசு சார் இயக்கத்துல ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ படங்கள்ல நடிச்சேன். என்னோட சின்னச் சின்ன ரியாக்ஷனை அவர் ரசிக்க ஆரம்பிச்சார். அதன் பிறகு ‘வேலாயுதம்’, ‘அழகிய தமிழ்மகன்’, ‘காவலன்’னு பல படங்கள்ல சேர்ந்து நடிச்சிருக்கேன்.

‘சிவகாசி’ படப்பிடிப்பில் நான், மறைந்த நடிகர் சிட்டிபாபு, பாடகர் ஸ்ரீராம், ‘காதல்’ அருண்குமார்னு ஒரு டீமா இருப்போம். அவர் எங்களோடு தான் ஜோடிக்கடிச்சு, கலகலப்பாக அரட்டை அடிச்சிட்டிருப்பார். ஆனாலும் வொர்க்ல ரொம்ப சின்ஸியரா இருப்பார். ‘அழகிய தமிழ்மகன்’ல நான் நடந்து வரும் போது குறுக்க தம்பி தன் காலால என்னை தடுக்க வேண்டும். அப்படி ஒரு சீன் இருந்ததும், தம்பி என்கிட்ட ‘அண்ணா அப்படி பண்ணலாமாங்கணா..’னு கேட்டார். ‘தாராளமா பண்ணலாம்மா..’னு சொன்னேன். அவரோட நடிக்கும் ஒவ்வொரு படங்கள்லேயும் கலந்து பேசிக்குவார். மிகப்பெரிய ஹீரோ என்கிற கர்வம் துளியும் கிடையாது. ‘நான் இந்த டயலாக்கை இப்படி பேசப்போறேன். நாம என்ன டயலாக்கை பேசப்போறோம்..’ இப்படி கலந்து பேசுவார்.

விஜய்யுடன்..

விஜய்யுடன்..

ஒரு வெளிப்புற படப்பிடிப்புல சாயந்திரம் ஆறு மணி வரை ஷூட் முடிச்சிட்டு, மறுநாளுக்கான சீனுக்கான ரிகர்சல்லை செய்ய ஆரம்பிச்சிட்டார். தூங்குறதுக்கு எப்போ போனீங்கனு அவர்கிட்ட கேட்டதும், ‘இரவு 12 மணியை நெருங்கிடுச்சு’னு சொன்னார். ஆனா, மறுநாள் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்துட்டார். பன்க்ச்சுவாலிட்டியை சரியா கடைபிடிப்பார். இயக்குநர்களின் நடிகரா இருந்தார். மத்தவங்க உணர்வுகளையும் மதிப்பார்.

‘காவலன்’ படத்துக்கு பிறகு அவரை பார்க்கலை. சின்ன இடைவெளியாகிடுச்சு. அதன் பிறகு விழாக்கள்ல என்னை எங்கே சந்திச்சாலும் பாசத்தோடு கட்டிப்பிடிச்சுக்குவார். நலம் விசாரிப்பார். என்னோட காமெடியை கேட்டு ரசிச்சு சிரிப்பார். அவர் இப்போது பெரிய பொறுப்பில் இருப்பது மிகப்பெரிய சாதனை. அதனால அவரை பார்க்க விரும்பினேன். உடனே வரச்சொல்லிட்டார். இப்பவும் பழசை மறக்காமல் கட்டிபிடிச்சுக்கிட்டார். அவர் சி.எம்., ஆச்சே அவரோடு அதிக நேரம் எடுத்துக்க வேண்டாம். ரெண்டு நிமிஷம் பார்த்துட்டு திரும்பிடலாம்னு நினைச்சுத்தான் போனேன்.

தேசிய விருதின் போது..

தேசிய விருதின் போது..

ஆனா, 20 நிமிஷம் பேசிக்கிட்டே இருந்துட்டோம். ‘பார்க்கிங்’ பார்த்தேன். உங்க மேல ரொம்ப கோபம் வந்துடுச்சு’னு சொல்லி ரொம்பவே பாராட்டினார். தவிர, தேசிய விருது வாங்கினதுக்கும் பாராட்டுக்களை தெரிவிச்சார். எங்க வீட்டில் எல்லோருமே உங்களோட ரசிகர்கள். எலெக்ஷன் ரிசல்ட்கள் வெளியாகிட்டு இருக்கும் போது டிவிகே முன்னிலை செய்தி வரும் போது என் மனைவி அக்கம் பக்கத்துல இருந்தவங்களுக்கு இனிப்பு வழங்கிட்டு இருந்தாங்க. அவங்களோட ஒரு வார்த்தை நீங்க பேசினால், பெரிய வெகுமதி கிடைச்ச மாதிரி இருக்கும்னு சொன்னேன். `உடனே பேசுறேன்’னு சொல்லி அவர் பேசினது, ரொம்ப சந்தோஷமா இருந்தது. உச்ச நட்சத்திரமாக படப்பிடிப்பில் இருந்த போது எப்படி அன்பையும், மரியாதையும் காட்டினாரோ அதே அன்பையும் மரியாதையும் இப்போதும் முதல்வர் விஜய் அவர்கள் காட்டியதை சந்தோஷமா இருக்கு!” என நெகிழ்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *