கோவை : தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காக, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கான அரசியல் கட்சித் தொடக்க விழா கோவையில் இன்று மாலை நடந்தது. கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த விழாவில், தமிழ்நாடு தெலுங்கு மக்கள் சங்கமாக இருந்த அமைப்பு, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி என பெயரிடப்பட்டு புதிய அரசியல் கட்சியாக தொடங்கப்பட்டது. கட்சியின் தலைவராக ராஜ்குமார் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த அரசியல் கட்சியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பச்சை, மஞ்சள் நிறத்தில் பறக்கும் கழுகடன் இருந்த கட்சி கொடியையும் ராமதாஸ் அறிமுகப்படுத்தினார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “‘அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக தெலுங்கு மொழி பேசும் மக்கள் பின்னடைவில் உள்ளனர். இதனால் தெலுங்கு மொழி பேசும் 34 ஜாதிகளை ஓன்று சேர்த்து தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மொழி பேசும் மக்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகின்றனர். ஆனால் தெலுங்கு மொழி பேசும் மக்களின் பிரச்னைகளை தீர்க்க இது வரை தமிழகத்தை ஆண்ட 3 கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்த புதிய கட்சி தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் உள்ள பகுதியில் அவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். இந்த கட்சி பா.ம.க. தலைமையில் உருவாகியுள்ள சமூக ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுகிறது” என்றார்.
ச.ஜெ.ரவி