சென்னை: திமுக எம்பி-யான தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நாளை (ஆக.27) ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்.15 அன்று சென்னை புரசைவாக்கம் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் தனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 75 சதவீத தொகையை தொகுதிக்கு செலவு செய்யவில்லை என குற்றம்சாட்டி விமர்சித்துப் பேசியிருந்தார்.
இதையடுத்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘தேர்தல் நேரத்தில் பழனிசாமி எனக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மத்திய சென்னை தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.17 கோடியில் ரூ. 17 லட்சம் தான் மீதம் உள்ளது. நான் 95 சதவீதத்துக்கும் மேலான தொகையை எனது தொகுதியின் மேம்பாட்டுக்காக செலவழித்துள்ளேன். தொகுதியில் செய்யப்பட்ட பணிகளையும் பட்டியலிட்டுள்ளேன்.
பழனிசாமி அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான கருத்துகளை தெரிவித்துள்ளார். அவரது பேச்சு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னையில் உள்ள, எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்பாக நாளை (ஆக.27) விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி நாளை ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.