“ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு மறுபுறம் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய மதுக்கடைகளை த.வெ.க அரசு திறக்கிறது” என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணியின் இந்தப் பகிரங்க குற்றச்சாட்டுக்கு பென்னாகரம் பகுதியில் நடந்துள்ள சம்பவம்தான் காரணம்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஆதனூர்-மாங்கரை பிரிவுச் சாலையில் சமீபத்தில் மனமகிழ்மன்றம் திறக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் இங்கு டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் பலமுறை முயற்சித்த நிலையில், மக்களின் தொடர் போராட்டத்தால் திறக்க முடியவில்லை.
தற்போது மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடையைத் திறந்ததால் கொந்தளித்த அப்பகுதி மக்கள், தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சியினரின் ஆதரவுடன் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் பென்னாகரம் பகுதி பரபரத்து கிடக்கிறது.
போதிய தொழில் வாய்ப்புகள் இல்லாமல், விவசாயத்தை மட்டும் நம்பியுள்ள மக்கள் அதிகமுள்ள தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம் தொகுதியோ மிக மிக பின் தங்கியுள்ளது.
இப்பகுதியில் பெரியவர், சிறியவர் எனப் பாகுபாடில்லாமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருவதால் குடும்பங்களில் பிரச்னைகளும், சமூகங்களுக்கிடையே சச்சரவுகளும், குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அரசே நடத்தும் டாஸ்மாக் கடைகள் ஒருபக்கமென்றால் சட்டவிரோத சந்துக்கடைகளால் 24 மணி நேரமும் மது விற்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கடந்த மாதம் போடூர் கிராமத்தில் 4 சந்துக்கடைகளை பெண்களே அடித்து நொறுக்கினார்கள்.
இந்தச் சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
த.வெ.க ஆட்சிக்கு வந்தபின்பு பேருந்து நிலையம், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.
இந்நிலையில்தான் மக்களின் தொடர் போராட்டத்தால் பென்னாகரம் அருகே மாங்கரையில திறக்கப்படாமல் இருந்த டாஸ்மாக் கடை, மனமகிழ் மன்றமாகத் திறக்கப்பட்டதற்கு பென்னாகரம் த.வெ.க எம்.எல்.ஏ கஜேந்திரனின் ஆதரவு காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

போராட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் சமூக நீதிப்பேரவையின் மாநில நிர்வாகி வழக்கறிஞர் மகாலிங்கத்திடம் பேசியபோது, “ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில் கடந்த ஆட்சியில் மதுக்கடை திறக்க அரசு முடிவு செய்யப்பட்டது.
அதை எதிர்த்து 2021-ம் ஆண்டிலிருந்து மக்களைத் திரட்டி போராடி வருகிறோம். அப்போதிருந்த பா.ம.க எம்.எல்.ஏ மூலமும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைக்கும் மனு கொடுத்தும் கிராமசபை கூட்டத்தில் மாங்கரை மற்றும் அஞ்சேளாவளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மதுக்கடை வேண்டாம் எனத் தீர்மானம் நிறைவேற்றி கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தடுத்து வந்தோம்.
இப்பகுதியில் சந்துக்கடை நடத்தி சம்பாதித்த ஒருவர் கடந்த ஆட்சியின்போதே மனமகிழ் மன்றம் (FL2) நடத்த உரிமம் பெற்று அதிகாரிகள் துணையுடன் திறக்க வந்தார். அப்போதும் போராட்டம் நடத்தி கலெக்டரிடம் முறையிட்டு தடுத்தோம்.
தற்போது ஆட்சி மாறியவுடன் இனி நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அதே நபர் மீண்டும் மனமகிழ் மன்றத்தை கடந்த மே 28 ஆம் தேதி திறந்தார். இதை எதிர்த்து கடந்த 30 ஆம் தேதி பத்து கிராம மக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தினோம்.
போராட்டத்துக்கு அனுமதி அளிக்காத போலீஸ் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. 5 ஆண்டுகளாகத் தடுக்கப்பட்ட மதுக்கடை தற்போது உருமாறி இங்கே வரக் காரணம் த.வெ.க எம்.ஏல்.ஏ கஜேந்திரனின் அழுத்தம்தான். உரிமம் பெற்றவருக்கு அவர் நெருக்கமானவர்.
மதுக்கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும், மக்கள் எதிர்ப்புள்ள பகுதியில் இருக்கும் கடைகள் மூடப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில் அவர் கட்சி எம்.எல்.ஏ-வோ மதுக்கடை திறக்க ஆர்வம் காட்டுகிறார்.
தற்போது மூடப்பட்டாலும் மறைமுகமாக சரக்கு விற்பனை ஆகிக் கொண்டுதானிருக்கிறது. இதை நிரந்தரமாக மூட அடுத்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.

இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ், “ஒருபுறம் 717 மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு மறுபுறம் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய மதுக்கடைகளை த.வெ.க அரசு திறக்கிறது. மாங்கரையில் மதுக்கடைக்கு எதிராக நீண்டகாலம் மக்கள் போராடி வந்த நிலையில் இப்போது மனமகிழ் மன்றம் வருவதான் பின்னணியில் த.வெ.க எம்.எல்.ஏ உள்ளார்.
போராடிய மக்கள் மீது பதிவு செய்துள்ள வழக்கை காவல்துறை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் பா.ம.க சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
“மக்கள் எதிர்ப்பை மீறி த.வெ.க எம்.எல்.ஏ ஆதரவில் மனமகிழ் மன்றம் திறந்தால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்று தி.மு.க-வைச் சேர்ந்த பென்னாகரம் முன்னாள் எம்.எல்.ஏ இன்பசேகரனும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து த.வெ.க-வைச் சேர்ந்த பென்னாகரம் எம்.எல்.ஏ கஜேந்திரனிடம் கேட்டோம், “அந்த மனமகிழ் மன்றத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை, அதை நடத்த உள்ளவர் யாரென்றே எனக்கு தெரியாது. மதுக்கடை வேண்டாம் என்கிற மக்களின் கோரிக்கையை நானும் வலியுறுத்துகிறேன்.
என் தொகுதி மக்களுக்கு எதிராக நான் நடப்பேனா? தேர்தலில் நான் வெற்றி பெற்றதால் அதைப் பொறுக்க முடியாமல் என் பெயரை இந்த விவகாரத்தில் அரசியலுக்காக இழுத்து விடுகிறார்கள்” என்றார்.

தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மனமகிழ் மன்றம் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படாலாம், அப்படி நடந்தால் மிகப்பெரும் போராட்டம் பென்னாகரம் பகுதியில் நடக்கும் என்கிறார்கள்.