ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் வி.சி.க தலைவர் திருமாவளவன் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும். இதுதொடர்பாக முதல்வரைச் சந்தித்து முறையிட இருக்கிறோம். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்படுகிறது.
மதுராந்தகத்தில் மேற்பார்வையாளர்களாக கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மற்றும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவர்களின் மேற்பார்வையின்கீழ் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் 10 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது.

தாராபுரத்தில் மேற்பார்வையாளர்களாக கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். அங்கு ஒருங்கிணைப்பாளர்களாக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்படுகிறது. மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் பொதுக்கூட்டங்கள் ஒருங்கிணைப்பட உள்ளது.