தலித் + முஸ்லிம் = 40% வாக்குகள்.. ஓவைசி போட்ட புது கணக்கு! யோகிக்கு மட்டுமின்றி அகிலேஷுக்கும் செக் | Owaisi -Chandrashekhar Azad Join Hands: What it Means for Dalit Muslim Alliance in UP elections

Spread the love

India

oi-Vigneshkumar

லக்னோ: உத்தர பிரதேச அரசியலில் தலித் மற்றும் முஸ்லிம் வாக்குகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியாக அசாதுதீன் ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியும், சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியில் இணைந்துள்ளன. 2027 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உருவாகியுள்ள இந்த கூட்டணி, பாஜகவுக்கு எதிராக மட்டுமின்றி, ஆளும் தரப்புக்கு எதிரான வாக்குகளை ஒருசேர பெற முடியும் எதிர்க்கட்சிகளையும் பாதிக்கும்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு கடந்த 2016ம் ஆண்டு முதலே யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தான் அமைந்துள்ளது. ஒரு பக்கம் 3வது முறையாக வென்று ஆட்சியை அமைக்கும் முனைப்பில் பாஜகவும் மற்றொரு புறம் பாஜகவை காலி செய்யும் முனைப்பில் அகிலேஷும் இறங்குகிறார்கள். இதற்கிடையே அங்கு 3வது அணி உருவாகியுள்ளது.

Owaisi

முஸ்லீம்- தலித் கூட்டணி

உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்கள் சுமார் 19 சதவீதமும், பட்டியலின மக்கள் சுமார் 21 சதவீதமும் உள்ளனர். இரு சமூகங்களையும் சேர்த்தால் மாநில மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம். இரு சமூகங்களின் வாக்குகளையும் ஒருங்கிணைத்தால் அது மிக பெரிய அரசியல் சக்தியாக மாறும். ஆனால், இந்த வாக்குகள் அனைத்தும் ஒரே கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு கிடைத்துவிடும் என்று கருத முடியாது. சாதி, பிராந்தியம், உள்ளூர் வேட்பாளர், அரசியல் கட்சிகளின் செல்வாக்கு என பல்வேறு காரணங்கள் வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இரு கட்சிகள்

ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி, தெலங்கானாவுக்கு வெளியேயும் தனது அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்த முயன்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் முஸ்லீம் சிறுபான்மை சமூகத்தின் ஒரு பகுதியினரிடம் ஓவைசிக்கு ஆதரவு இருந்தாலும், இதுவரை ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை. மறுபுறம், சந்திரசேகர் ஆசாத் தலித் அரசியலில் முக்கியமான முகமாக உருவெடுத்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் நகினா தொகுதியில் வெற்றி பெற்றது அவரது கட்சிக்கு மாநில அளவில் முக்கிய அரசியல் அடையாளத்தை அளித்தது. குறிப்பாக இளம் தலித் வாக்காளர்களிடம் அவரது அரசியல் அணுகுமுறை கவனத்தை பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி

இந்த கூட்டணி பாஜகவுக்கு எந்தளவுக்கு சவாலோ அதற்கு இணையாக சமாஜ்வாதி கட்சிக்கும் சவாலாக மாறியிருக்கிறது. ஏனென்றால் பிற்படுத்தப்பட்டோர் (P), தலித்துகள் (D), சிறுபான்மையினர் (A) ஆகியோரை உள்ளடக்கிய PDA என்ற அரசியல் முழக்கத்தின் அடிப்படையில் அகிலேஷ் யாதவ் தனது தேர்தல் வியூகத்தை உருவாக்கி வருகிறார். இந்த நிலையில், தலித் மற்றும் முஸ்லிம் வாக்குகளை தனியாக ஒருங்கிணைக்க ஓவைசி-ஆசாத் கூட்டணி முயல்வது, சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஆளும் கட்சி

பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பதை தடுக்க வேண்டும் என்பதே புதிய கூட்டணியின் முக்கிய நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜகவுக்கு எதிரான கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டால், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பல அணிகளுக்குப் பிரியும் வாய்ப்பும் உள்ளது. ஓவைசி முதலில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் சேர தான் விரும்பினார். ஆனால், அங்கிருந்து க்ரீன் சிக்னல் எதுவும் வரவில்லை. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த ஓவைசி இப்போது இந்த புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளார்.

அதேநேரம் இரு தலைவர்களும் கூட்டணி அறிவித்தாலேயே அந்த சமூகங்களின் வாக்குகள் மொத்தமாக இந்த கூட்டணிக்கு வந்துவிடும் என சொல்ல முடியாது. இந்த கூட்டணி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது, வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்கிறது, பிற கட்சிகளுடன் தொகுதி புரிந்துணர்வு ஏற்படுகிறதா என்பவை முக்கியமாக இருக்கும். தலித்- முஸ்லிம் ஒற்றுமை என்ற அரசியல் முழக்கம் வாக்குகளாக எந்த அளவுக்கு மாறுகிறது என்பதுதான் 2027 உத்தர பிரதேச தேர்தலில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *