வலது கையை அடிபட்ட இடத்தில் வைத்தபடி இருந்தேன். பள்ளிச் சீருடையின் வலது பக்கம் முழுவதும் இரத்தமாக இருந்தது. அதேபோல் நண்பனின் சீருடையிலும் இரத்தக் கறை படிந்தது.
இரத்தம் சொட்டச் சொட்ட வருவதைப் பார்த்த என்னுடைய வகுப்பாசிரியர் உடனே தலைமையாசிரியர் அறையிலுள்ள முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து, அதில் உள்ள அனைத்துப் பஞ்சையும் எடுத்து என் தலையில் வைத்துப் பிடித்துக் கொண்டார்.
அனைத்து ஆசிரியர்களும் அதிர்ச்சியாகிவிட்டார்கள்.
அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளாகவே ஆட்டோவை வரவழைத்து என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
என்னுடைய பள்ளிக்கூடத்தின் பெயர் சா. இ. நா. மேரி தொடக்கப்பள்ளி, சாத்தூர். பள்ளியானது நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. அதனால்தான் சீக்கிரமாக மருத்துவமனை செல்ல முடிந்தது.
அடிபட்டதும் எனக்கு இரத்தம் வருவது மட்டும்தான் தெரிந்ததே தவிர, எந்த ஒரு வலியோ எந்த ஓர் உணர்வோ தெரியவில்லை!
இருந்தும் நான் வேண்டும் கருப்பசாமியை வேண்டியபடி ஆசிரியரோடு ஆட்டோவில் மருத்துவமனைக்குச் சென்றேன்.
சிறுவயதிலிருந்து எனக்குக் காய்ச்சல் எதுவாக இருந்தாலும் என்னுடைய அம்மா சாத்தூரில் உள்ள ஸ்டார் மருத்துவமனைக்குத்தான் என்னைக் கூட்டி வருவார்.
அடிபட்டிருக்கும் போதும் என்னுடைய ஆசிரியர் ஸ்டார் மருத்துவமனைக்குத்தான் என்னை அழைத்துச் சென்றார். ஏனென்றால் அதுதான் பள்ளிக்கு அருகில் உள்ளது.
மருத்துவமனைக்குள் நுழைந்ததும் செவிலியர்கள் என்னை ஒரு படுக்கையில் படுக்க வைத்தார்கள்.
பிறகு என்னுடைய சட்டையைக் கழற்றினார்கள். தையல் போடும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஓர் ஊசியை முதலில் போட்டார்கள். ஆனால் எனக்கு மயக்கம் வரவில்லை.
“ஒன்னும் ஆகாது! தையல் போடும்போது சும்மா எறும்பு கடிச்ச மாதிரிதான் இருக்கும்! உன்னுடைய பெயர் என்ன?” இப்படியெல்லாம் அந்தச் செவிலியர் என்னைக் கேட்டபடி தலையின் காயத்திற்குத் தையலைப் போட ஆரம்பித்தார்.
எல்லாம் முடிந்த பிறகு இறுதியாகத் தலையைச் சுற்றி வெள்ளைத்துணியால் பெரிய கட்டு போடப்பட்டது.
இந்தச் செய்தியை அறிந்த என்னுடைய அம்மா, வேலை பார்த்துக் கொண்டிருந்த தீப்பெட்டி கம்பெனியிலிருந்து பதற்றத்தோடு, கூட வேலை பார்க்கும் ஒருவரோடு பைக்கில் மருத்துவமனைக்கு வந்தார்.
என்னை இந்தக்கோலத்தில் பார்த்ததும் ரொம்பவும் துடிதுடித்துப் போய்விட்டார். அவசரத்தில் கையில் பணமும் கொண்டு வரவில்லை.
தலையில் கட்டு போட்ட செலவு மற்றும் மருந்து மாத்திரைகளுக்குச் சேர்த்து 450 ரூபாய் பில் வந்தது.
அம்மா டாக்டரிடம் போய் பேசினார். நான் பக்கத்திலேயேதான் உட்கார்ந்திருந்தேன்.
“பரவால்லம்மா நீ நாளைக்கு வந்து காச குடும்மா!” என்ற பெருந்தன்மையோடு அந்த மருத்துவர் கூறினார். மருத்துவரின் பெயர் டாக்டர் இராமசாமி.
டாக்டரின் இந்தப்பொதுநலமான, பெருந்தன்மையான மனிதநேயச் செயல் என் வாழ்க்கையைக் காப்பாற்றியதையும் தாண்டி, இப்போதும் நான் என் வாழ்க்கையில் மனிதநேயத்தோடு இருக்க காரணமும் ஆனது.
அம்மாவிற்கு அந்த மருத்துவர் நல்ல பழக்கம். மருத்துவமனைக்குச் செல்லும்போது என்னிடமும் நன்றாக பேசுவார்.
எனக்கு உடல்நிலை சரியில்லாத போது அம்மா என்னை இந்த ஸ்டார் மருத்துவமனைக்குக் கூட்டி வரும் போது, இராமசாமி டாக்டர் அதிகமாக ஃபீஸ் கேட்கிற மாதிரி தெரிந்தால், அம்மா 30 அல்லது 50 ரூபாய் குறைத்துதான் கொடுப்பார். அதையும் சிரித்தபடி அந்த டாக்டர் வாங்கிக் கொள்வார். அப்படி ஒரு பண்புள்ள டாக்டர்.
அம்மாவிடம் காசு இல்லாததை அறிந்த என்னுடைய ஆசிரியர், அந்த 450 ரூபாய் பணத்தை எனக்காகக் கட்டினார். அம்மா ஆசிரியரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.
அதன் பிறகு அடிபட்டதிலிருந்து தையலைப் பிரிப்பது வரை, அம்மா என்னைக் குளிக்க வைப்பதிலிருந்து சாப்பாடு ஊட்டி விடுவது வரை வரை என்னைக் கவனமாகக் கவனித்துக் கொண்டார்.
என் உயிரைக் காப்பாற்றியவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் என்றால் அதையும் தாண்டி சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்ற என்னுடைய ஆசிரியர்களும் தெய்வங்கள்தான்..!
என்னுடைய வகுப்பு ஆசிரியர், மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் டாக்டர் இராமசாமி ஆகியோர்கள் என்னைக் காப்பாற்றிய காவல் தெய்வங்களாக நான் அவர்களை பார்க்கிறேன்.
மருத்துவப்பணி அறப்பணி; அதற்குத் தங்களை அர்ப்பணிக்கும் மருத்துவர்களுக்கு மீண்டும் ஒருமுறை என் சார்பாகத் தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்!!
நன்றி..!
செ.ஹரிஷ்.